குழந்தையை வளர்த்தெடுக்க பெற்றோருக்கு உரிய கடமைகளில், நீங்கள் குழந்தைகளிடம் எப்படி பேசுகிறீர்கள் என்பது முக்கியமானது. நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதை பொறுத்துதான், உங்கள் குழந்தை தன்னைப் பற்றியும், உங்களை குறித்தும் எப்படி சிந்திக்கும் என்பது தெரியவரும். சில வார்த்தைகள் உங்கள் குழந்தைகளின் மனநிலையையும், மன உறுதியையும் சீர்குலைப்பதாக அமைந்துவிடும்.
நீங்கள் நகைச்சுவையாக குறிப்பிடும் சில விஷயங்கள் அல்லது விளையாட்டுத் தனமாக பேசும் சில விஷயங்களை உங்கள் குழந்தையும் அப்படியே புரிந்து கொள்ளும் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் அதற்குத் தவறான அர்த்தம் கொண்டு விடுவார்கள். எந்தவொரு விஷயம் என்றாலும், அதை பெற்றோர் எப்படி சரி, தவறு என அணுகிறார்களோ அதையேதான் குழந்தைகளும் கடைப்பிடிக்கும். இதனால், நீங்கள் தவறான கருத்துகளையோ அல்லது விவாதங்களையோ நடத்தினால், எதிர்காலத்தில் உங்கள் குழந்தையின் நடத்தையில் அது அப்படியே பிரதிபலிக்கும்.
பட்டப்பெயர் வைத்து அழைப்பது : என்னதான் குழந்தைகளுக்கு பெற்றோர் அழகான பெயர் வைத்திருந்தாலும் கூட, சில பட்டப்பெயர்களை வைத்து அழைப்பார்கள். ஆனால், எல்லா சமயத்திலும் குழந்தைகள் அதை ரசிக்க மாட்டார்கள். விளையாட்டாகத்தான் இப்படி அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் குழந்தைகளிடம் இருக்காது. இதனால், அவர்கள் தன்னம்பிக்கை இழக்கக் கூடும்.
”தப்பு ஒண்ணும் இல்ல’’ என்னும் சொல் வழக்கு : சிலர் பேச தொடங்கும்போதே “தப்பு ஒண்ணும் இல்ல, ஆனால்,’’ என்று பேசத் தொடங்குவார்கள். நிச்சயமாக இதற்கு அடுத்து பேச உள்ள விஷயங்கள் தவறான அர்த்தம் கொண்டதாகத்தான் இருக்கும் என்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும். ஆகவே, நீங்கள் குழந்தைகளிடம் பேசும்போது எப்போதுமே, இந்த தப்பு ஒண்ணும் இல்ல என்ற சொற்றொடரை பயன்படுத்தவே கூடாது.
நீ வித்தியாசமான ஆளு : அன்பு என்பது அடிப்படையில் ஒருவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் விஷயமாகும். அது உங்கள் நடத்தையிலும், வார்த்தையிலும் பிரதிபலிக்க வேண்டும். குழந்தையிடம் நீ வித்தியாசமான ஆளு என்று சொல்வதும், உன்னால் எனக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது என சொல்வதும் தவறு. இது உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை சீர்குலைத்து விடும். ஆகவே, குழந்தைகளிடம் பேசும்போது மிகவும் கனிவான, நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.
தோற்றத்தை வைத்து நக்கலடிப்பது : பள்ளியிலும், விளையாட்டு மைதானத்திலும் சக நண்பர்களின் தோற்றத்தை வைத்து நக்கல் அடிக்கும் குழந்தைகளை உங்கள் குழந்தையும் எதிர்கொள்ள கூடும். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் குழந்தையின் மன உறுதியை சீர்குலைத்து, சமூகத்தில் இருந்து அவர்களை விலகியிருக்க செய்துவிடும். வீட்டிலும் கூட, குழந்தையின் தோற்றத்தை வைத்து நீங்கள் கிண்டல் செய்தீர்கள் என்றால், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பற்ற மனநிலையை உணரத் தொடங்கும். ஆகவே, அதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.