டீன் ஏஜ் பருவம் என்பது கொஞ்சம் வித்தியாசமானது தான். மற்ற பருவங்களை போல் அல்லாமல், உடல் ரீதியான வளர்ச்சி, மன முதிர்ச்சி, பிடித்தது பிடிக்காதது என்று தங்களை பற்றி தாங்களே தாங்களே கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கும் காலம் இது. டீனேஜ் பருவத்தில் எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் மிகப்பெரிய சவாலாக தோன்றும். வாழ்க்கை பற்றிய பயமும் கவலையும் ஏற்படும். அதே நேரத்தில் எல்லாவற்றையும் துணிச்சலாக செய்ய வேண்டும் என்றும் தோன்றும். டீன் ஏஜ் பருவத்தில் இருந்து அடல்ட் பருவத்திற்கு மாறும் கால கட்டம் குழப்பமானதாகவும் கொஞ்சம் கடினமானதாகவும் இருக்கும். உடல் ரீதியாக, மன ரீதியாக மற்றும் உணர்ச்சிபூர்வமாக பல்வேறு பிரச்சனைகளை டீனேஜர்கள் எதிர்கொள்கிறார்கள். இதை சமாளிப்பதற்கு பெற்றோர்களின் உதவி மிகமிக அவசியம்.
டீனேஜ் பிள்ளைகள் வளர்ப்பது பெற்றோர்களுக்கும் சவால் தான். அவர்களுடன் எல்லை வகுப்பது, சுதந்திரமாக உணரச் செய்வது, எல்லாவற்றிலும் தலையிடாமல் இருப்பது, அதே நேரத்தில் அவர்களுக்கு எமோஷனல் சப்போர்ட் வழங்குவது என்று பல விதமாக பெற்றோர்கள் தங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஏனென்றால், மன நல ஆரோக்கியம் குறித்த பல்வேறு ஆய்வுகள், டீனேஜ் பிள்ளைகள் அதிக அளவில் டிப்ரஷனுக்கு ஆளாகிறார்கள் என்று கூரியுள்ளன.
டீனேஜ் டிப்ரஷன் அறிகுறிகள் : டீனேஜ் டிப்ரஷன் பெரும்பாலும், உணர்ச்சிபூர்வமாகவும், அவர்களின் நடவடிக்கைகளிலும் மாறுதல்களை எற்படுத்தும். அடிக்கடி அழுவது, தீவிரமான மன நிலை மாற்றங்கள், எரிச்சலாக உணர்வது, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, தாழ்வு மனப்பான்மை, கடந்த காலத்தில் செய்த தவறுகளால் பலவீனமாக உணர்வது ஆகியவை டீனேஜ் டிப்ரஷனின் அறிகுறிகளாகும்.
நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றம் என்பது, அவர்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள், ஒன்று அதிகமாக தூங்குவார்கள் அல்லது தூக்கமே இருக்காது, தனியே இருக்க விரும்புவது, எப்போதுமே பரபரப்பாக இருப்பது, வீட்டில் இருப்பவர்களுடன் கூட சரியாக இணங்காமல் இருப்பது ஆகியவை அடங்கும். ஒரு டீனேஜர் எவ்வாறு நடந்து கொள்கிறார், எப்படி சிந்திக்கிறார், எப்படி உணர்கிறார் என்று எல்லா விதங்களிலும் அவரை பாதிக்கும். மற்றும், தொடர்ந்து சோகமான மன நிலையிலும், எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பதையும் பார்க்க முடியும். இத்தகைய அறிகுறிகளை உங்கள் பிள்ளையிடம் பார்த்தால், அவர் டிப்ரஷனால் பாதிக்காபட்டுள்ளார். இந்தப் பிரச்சனைகளால் டீனேஜர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
டீன்ஏஜ் பிள்ளைகளின் உலகத்தில் அதிகமாக இருப்பது அவர்களுடைய நண்பர்கள் மற்றும் பியர்ஸ் என்று சொல்லப்படும் அவர்கள் போட்டியாளர்களாக கருதுபவர்கள்தான். இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு பலவிதமான கேலி மற்றும் கிண்டல்களுக்கும் ஆளாகிறார்கள். 12 வயதில் இருந்து 18 வயது வரை இருக்கும் பிள்ளைகள் அதிகமான புல்லியிங் செய்யப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புல்லியிங் என்பது ஒருவரை ஒருவர் மனதை நோகடிக்க செய்வது, பெரிய கூட்டத்தில் அவமானப் படுத்துவது, எட்டி உதைப்பது, அடிப்பது என்று மோசமாக பேசுவது முதல் அவரை உடல் ரீதியாக காயப்படுத்துவதை என்று பலவிதமான துன்புறுத்தும் செயல்களை குறிக்கும்.
இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்ட டீனேஜர்கள் டிப்ரெஷனால் பாதிக்கப்படுவதற்கு அதிக சாத்தியமிருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அது மட்டுமில்லாமல், டீனேஜ் பிள்ளைகளை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொழில்நுட்பமும் பல விதமாக பாதிக்கிறது மற்றும் இப்படித் தான் இருக்க வேண்டும், இவ்வாறு நடக்க வேண்டும் என்று அழுத்தத்தைக் கொடுக்கிறது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்கு எவ்வாறு உதவலாம் : டீன் ஏஜ் பிள்ளைகள் எந்த விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் அதே நேரத்தில் அவர்களுடைய எந்த விஷயத்திலேயும் தலையிடாமல் இருப்பதும் தவறான செயல். எனவே அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இதனால் தான் டீனேஜ் பிள்ளைகளுடன் பெற்றோர்கள் நண்பர்களாக பழக வேண்டும் என்று கூறப்படுவது உண்டு. மற்றவர்களிடையே அவமானப்படுவது, உடல் ரீதியாக பாலியல் ரீதியாக காயப்படுவது தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும்.