மேலும் இன்று அவர் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். எல்லோரது வாழ்க்கையையும் போலவே கோலியின் வாழ்வும் சுமுகமாக ஒன்றும் செல்லவில்லை. நாம் எதிர் கொள்ளும் தடைகளை போலவே அவரும் பல தடைகளை கடந்து தான் இந்த உயரத்தை தொட்டிருக்கிறார். உங்கள் துறையில் அல்லது வாழ்க்கையில் விராட் கோலியை போலவே வெற்றியை ருசிக்க விரும்புகிறீர்களா.? அப்படி என்றால் அவரது வெற்றிக்கு பின்னால் உள்ள சில ரகசியங்களை இங்கே பார்க்கலாம் வாருங்கள்..
நம்பிக்கையுடன் இருங்கள்: உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையே உங்களுக்கு பாதி வெற்றியை தேடி தரும். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் போட்டிகளை பற்றி கவலை கொள்ளாமல், பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் இருங்கள். கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் விளையாட்டை கோலி எதிர்கொள்வது இப்படி தான். களத்தில் ஆக்ரோஷம் காட்டுவர் தவிர நம்பிக்கையை இழக்க மாட்டார். எப்படியாவது வெற்றி வாய்ப்பை பறித்து விடலாம் என்ற நம்பிக்கையை மட்டுமே அவர் முகத்தில் வெளிப்படுத்துவார். இதையே நீங்களும் பின்பற்றுங்கள்.
விமர்சனங்களை எதிர் கொள்ளுங்கள்; உங்களை யாருமே விமர்சிக்க கூடாது என்று எதிர்பார்ப்பது உங்களுக்கு தான் மைனஸ். ஏனென்றால் எல்லோரும், எப்போதும் சரியாக இருக்க முடியாது. எனவே விமர்சனத்தை நேர்மறையாக எடுத்து கொள்ளும் மனப்பான்மை கொண்டிருப்பது மிகவும் முக்கியம். உங்களுக்கு தெரியுமே.. கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் தோற்றால் கூட ரசிகர்கள், விமர்சகர்கள் வீரர்களை எவ்வாறு ஏளனம் செய்வார்கள் மற்றும் விமர்சிப்பார்கள் என்று. இதையெல்லாம் கடந்து விமர்சனங்களை எதிர் கொண்டு அவற்றை தவிடு பொடியாக்கி பலமுறை மீண்டு வந்தவர் விராட் கோலி. எனவே தைரியமாக விமர்சனங்களை எதிர் கொண்டு அவற்றிலிருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்.
உங்கள் இலக்குகளை அடைய ஆக்ரோஷம்.. ஆக்ரோஷம் என்றால் வன்முறை என்பது இங்கே பொருள் அல்ல. மாறாக சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இறுதி வரை தன்னம்பிக்கை இழக்காமல் போராடும் குணமே இங்கே ஆக்ரோஷம் என்று பொருள்படும். விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான வீரர் என்பது அனைவருக்குமே தெரியும். , ஆனால் அந்த குணத்தை மற்றும் அணுகுமுறையை அவர் அணிக்காக போட்டிகளில் விளையாடும் போது மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கடின உழைப்பே தேவை.. வெற்றி பெற நீங்கள் எவ்வளவு நல்லவர் என்பது முக்கியமல்ல, எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதே முக்கியம். எப்பேர்ப்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும் உழைத்தால் மட்டுமே அவராலும் சாதிக்க முடியும். இலக்குகளை அடையும் வரை வெறித்தனமாக உழைத்து கொண்டே இருங்கள். ஆனால் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா என்பதை உறுதிபடுத்தி கொண்டே உழையுங்கள். கண்டிப்பாக இலக்கை அடையலாம் என்பதை தான் கோலியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
கற்று கொள்ளவதில் ஆர்வம்.. வெற்றிகரமான நபராக திகழ ஒவ்வொரு நாளும் உங்கள் திறமையை மேம்படுத்தும் வகையில் புதிதாக ஏதாவது கற்று கொண்டே இருக்க ஆர்வம் காட்ட வேண்டும். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனான தோனியிடமிருந்து எண்ணற்ற விஷயங்களை கற்று கொண்டவர் கோலி. ஈகோ பார்க்காமல் இருவரும் அணியின் நலனுக்காக செயல்பட்டதால் தான் இருவருமே சிறந்த கேப்டன்களாக திகழ்ந்தனர்.