ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி அன்று, "சர்வதேச மகளிர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட உதவும் சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பணியிடத்தில் பாலின சமத்துவத்திற்காக வாதிடுங்கள் : பணியிடங்களில் பாலின பேதமும் பாலியல் சீண்டலும் இன்னமும் தொடர்வது வேதனைக்குரியது. கோவிட் பெருந்தொற்று சமயத்தில் பணியிடத்தில் பாலின சமத்துவமின்மை, கூடுதல் வீட்டுப் பொறுப்புகள் போன்றவை பெண்களை கடும் நெருக்கடிக்கு தள்ளியது.எல்லா இடங்களிலுமே ஆண்களுக்கான வாய்ப்பு, பெண்களை ஒப்பிடும்போது சற்று அதிகமாகவே இருக்கிறது. அவர்கள் செய்யும் பணிக்கு போதிய அங்கீகாரமோ ஆதரவோ கிடைப்பதில்லை. எனவே பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்க அடிப்படையில் இருந்து மாற்றத்தை விதைக்க வேண்டும். வேலையில் பாலின சமத்துவத்தை நோக்கி பெண்கள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிசெய்ய, நல்ல பணிச்சூழலை உருவாக்குவது அவசியம். இந்த சர்வதேச மகளிர் தினத்தில், உங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை ஆராய்ந்து கீழ்வரும் கொள்கைகளை வகுப்பது நல்லது. பணியாளர்களை பணியமர்த்துவதற்கான பயிற்சிகளை வழங்குதல், தலைமைப் பதவிகளில் பெண்களை முன்னிறுத்துவது, பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை வழங்குதல், வணிகம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியலில் பெண்களைச் சமமாக மதித்தல், போன்ற கொள்கைகளை பணியிடங்களில் வகுப்பது நல்லது.
பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல் : பெண்கள் எப்போதும் நிதி சுதந்திரமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட யாரையும் எதிர்ப்பார்க்காமல் இருப்பது அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். பெண் சுய தொழில் முனைவோர்களை ஆதரித்து, சமமான பிரதிநிதித்துவம் அளித்தல், பொருளாதார அதிகாரம் அளித்தல் போன்றவை, அவர்களின் வளமான பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் ஊரில் உள்ள பெண் தொழில் முனைவோர்களை தேடி அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.
ஆன்லைன் வழியே கலந்துரையாடலாம் : பெண்கள் தங்கள் அனுபவங்கள் மற்றும் அறிவுரைகளைப் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது, அவர்கள் உத்வேகம் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு, உலகின் பெரும்பாலான மக்கள் நேரில் வருவதற்குப் பதிலாக ஆன்லைனில் கூடி வருவதால், சர்வதேச மகளிர் தினத்திற்காக வீடியோ கான்ஃபெரென்ஸிங் மூலமாக ஒன்று கூடலாம். அவ்வாறு ஒன்று கூடும்போது ஒரு பெண்ணாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்டீர்கள்? உங்கள் வாழ்க்கையில் எந்த வழிகாட்டிகள் அல்லது முன்மாதிரிகள் உங்களை சாதகமாக பாதித்துள்ளன, அவர்கள் உங்களுக்கு கற்பித்த ஒரு பாடம் என்ன? உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு சமநிலைப்படுத்த முடிந்தது? போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இதன் வழியே உங்கள் தொழில் ,சமூகத்தில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஆராய்ந்து, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது பெண்கள் குழுவை ஊக்குவிக்கலாம்.
வாசகர் வட்டத்தை உருவாக்குதல் : உலகெங்கிலும் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சில சவால்களைப் புரிந்துகொள்வது பாலின சமத்துவத்தை ஆதரிப்பதில் ஒரு முக்கியமான படியாகும். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட, பெண்களின் பிரச்சனைகள், அதிகாரமளித்தல் மற்றும் சாதனைகள் குறித்து கல்வி கற்பதில் கவனம் செலுத்தும் உங்கள் குழு அல்லது உங்கள் சமூகத்தில் உள்ளவர்களுடன் ஒரு வாசகர் வட்டத்தை தொடங்கலாம். அதில், பெண் கல்விக்காக போராடி தாலிபான்களால் சுடப்பட்ட பெண்ணின் கதையான, மலாலா யூசுப்சாய் மற்றும் கிறிஸ்டினா லாம்ப் போன்ற நூல்கள், சிமாமண்டா என்கோசி ஆதிச்சி எழுதிய "நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்" போன்ற நூல்களை இடம்பெறச் செய்யலாம்.
பெண்ணிய திரைப்படங்களை திரையிடுதல் : சினிமா பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கிறது என்ற கருத்து உலகம் முழுதுமாக பரவலாக பேசப்படும் ஒன்று. இந்த ஒரு கோணத்தை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, பாலின விதிமுறைகள், சமூகப் பிரச்சினைகள், போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி எடுக்கும் படங்களை உங்கள் குழுவினருடன் கண்டுகளிக்கலாம். 2019 ஆம் ஆண்டின் Celluloid Ceiling அறிக்கையின்படி, சிறந்த 100 வசூல் படங்களில் பணிபுரியும் அனைத்து இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், நிர்வாகத் தயாரிப்பாளர்கள், எடிட்டர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களில் 20% பெண்களே உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோல்டன் குளோப் போன்ற உயரிய விருதுகளுக்கு சர்வதேச அளவில் குறைந்த எண்ணிக்கையிலான பெண் இயக்குனர்களே பரிந்துரைக்கப்படுகின்றனர். எனவே சர்வதேசம் முதல் உள்ளூர் வரை பெண் இயக்குநர்களின் சில படங்கள் அல்லது பெண்களை மையமாகக் கொண்ட நடிகர்களைக் கொண்ட சில படங்களை உங்கள் குழுவினருடன் கண்டுகளிக்கலாம்.
தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கலாம் : கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு ஆதரவு, பெண் கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் தொண்டு நிறுவனங்கள் பல இயங்கிவருகின்றன. அவற்றை கண்டறிந்து, அவர்களுக்கு நன்கொடைகளை வழங்கலாம்.
பெண்களை அங்கிகரித்தல் : சர்வதேச மகளிர் தினத்தில் பெண் சமூகத்தை அங்கிகரியுங்கள். அவர்கள் உங்கள் தாயாராகவோ, பாட்டியாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ, அல்லது தோழியாகவோ இருக்கலாம். அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவமானவர்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தும் விதமாகவும், அவர்கள் எவ்வளவு அருமையாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க, குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவிக்கலாம்.
மகளிர் தின விழாக்களில் ஆண்களை பங்கேற்கச் செய்தல் : சர்வதேச மகளிர் தினச் செயல்பாடுகளைத் திட்டமிடும்போது, உங்கள் ஆண் நண்பர்கள் அல்லது சக தோழர்கள் விழாவில் கலந்துகொண்டு பாலின சமத்துவத்தை வென்றெடுக்க அழைப்பதையும் ஊக்குவிப்பதையும் உறுதிசெய்யுங்கள், ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வெறும் பேச்சாக மட்டும் இருந்துவிடாமல், சாதனை படைத்த ஆண்களுக்கு அவர்களின் துணைவியார் எப்படி எல்லாம் உதவியாக இருந்தார் என்பதை பெண்களிடையே பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்யலாம்.