தமிழ் புத்தாண்டுக்கு முன் வீட்டை சுத்தம் செய்வது பண்டிகையை சிறப்பாக்க உதவும். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உங்கள் வீட்டை நேர்த்தியாக சுத்தம் செய்து பண்டிகையை தொடங்குங்கள். வீடு வாசலில் அரிசி மாவு கோலம் போடுவதில் துவங்கி , வாசலை மா இலைகளால் அலங்கரியுங்கள். புத்தாண்டுக்கு முன்தினமே வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து விட்டால் அடுத்தநாள் வழிபட தேவையான வேலைகளை ரிலாக்ஸாக செய்யலாம்.
தமிழ் புத்தாண்டின் சிறப்பே நமது பாரம்பரிய முறைப்படி துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு என அறுசுவை அடங்கிய உணவுகளை தயாரிப்பதே. ஆறு வெவ்வேறு சுவைகளில் தயாரிக்க வேண்டிய உணவுகளை முன்பே சேகரித்து வைத்து கொள்ளுங்கள். இதில் துவர்ப்புக்கு வெற்றிலை பாக்கு சேர்க்கலாம். உணவுக்கு பிறகு துவர்ப்பான வெற்றிலை பாக்கு போடுவது ஜீரணத்திற்கும் நல்லது. வழக்கமான பண்டிகை உணவுகளான வடை, பாயசத்தோடு மாங்காய் பச்சடி அவசியம். முக்கனிகளான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழங்களை புத்தாண்டு உணவுகளில் சேர்த்து கொள்ளுங்கள்.
தமிழ் புத்தாண்டின் முக்கிய அம்சம் குடும்பத்துடன் தெய்வீக வழிபாடு செய்வது. உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் சாமி படங்கள் மற்றும் சிலைகளை சுத்தம் செய்து பூக்கள் வைத்து மாலை போட்டு வழிபாட்டிற்கு தாயர் செய்யவும். பின் தெய்வங்களுக்கு முன் வாழைஇலை போட்டு பழங்கள், இனிப்புகள் மற்றும் வீட்டில் சமைக்கப்பட்ட அறுசுவை பதார்த்தங்கள் என வைத்து பிரசாதமாக படைக்கவும். பின் சூடம் காட்டி ஆரத்தி எடுத்து, சாம்பிராணி காட்டி, பித்தளை மணி அடித்து மந்திரங்கள் சொல்லி வழிபடுங்கள்.
வீட்டில் புத்தாண்டு வழிப்பாட்டை சிறப்பாக முடித்த பின் நண்பர்களை, உறவினர்களை சந்தித்து வாழ்த்து கூறுங்கள். இனிப்புகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு உள்ளூர் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து உங்கள் புத்தாண்டு செழிப்புடன் இருப்பதை உறுதி செய்யுங்கள். கோவிலுக்கு சென்று தேங்காய் உடைப்பது தடைகள் மற்றும் சவால்கள் இல்லாமல் புத்தாண்டை கடக்க செய்யும் பிரார்த்தனையை குறிக்கிறது.