ஹோலி என்பது வண்ணமயமான பண்டிகை. இதில் ஒருவருக்கு, ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி ஆனந்தமாகக் கொண்டாடுகின்றனர். ஆனால், இந்த வண்ணப் பொடிகளால் நம் சருமத்திற்கும், முடிக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற கவலை உங்களுக்கு வரலாம். பண்டிகையை கொண்டாடுகின்ற அதே சமயத்தில் இந்த ஆபத்துகளை தவிர்ப்பது எப்படி என்று உங்களுக்கு குழப்பங்கள் ஏற்படக் கூடும்.
ஆனால், இயற்கையான எண்ணெய்கள் உங்கள் சரும பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும். தற்போது விற்பனைக்கு வருகின்ற வண்ணப் பொடிகள் பெரும்பாலும் ரசாயன கலவையை கொண்டிருக்கின்றன. அவை நம் சருமத்தை பாதிக்கும். வறட்சியாகும், மந்தமாகவும் காட்சியளிக்கும். இது மட்டுமல்லாமல் தற்போது வெயில் வேறு மெல்ல, மெல்ல சுட்டெரிக்க தொடங்குவதால் நம் சருமம் எரிச்சல் அடையும். இதையெல்லாம் தவிர்க்க கீழ்காணும் எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய் : சருமம் மற்றும் முடி பாதுகாப்பிற்கான பொருட்களில் தேங்காய் எண்ணெய் முதன்மையானதாக இருக்கிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் தடவுவது மிகுந்த பலன் அளிக்கும் என்ற செய்தி பல இளைஞர்களுக்கு தெரிவதில்லை. ஹோலி வண்ணப் பொடிகளில் உள்ள ரசாயனங்கள் நமது சருமத்தை பாதித்து விடாதபடி, சருமத்திற்கும், ரசாயனத்திற்கும் இடையே ஒரு தடுப்பு அரணாக தேங்காய் எண்ணெய் வேலை செய்யும்.
ஆலிவ் எண்ணெய் : சருமத்திற்கு எண்ணற்ற பலன்களை தரக் கூடிய மற்றுமொரு எண்ணெய் ஆகும். இந்த எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. மிகவும் லேசான எண்ணெய் இதுவாகும். ஆகவே, முடி மற்றும் சருமத்தில் தேய்த்த பிறகு பிசுபிசுப்பு தன்மை இருக்காது. இது மட்டுமல்லாமல் வண்ணப் பொடிகளின் அபாயங்களில் இருந்து பாதுகாப்பு தரும்.
பாலிஸ்டர் உடைகளை அணிவது நல்லது : ஹோலி பண்டிகையின்போது ரசாயனப் பொடிகளில் இருந்து தப்பிக்க உடலில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பாலிஸ்டர் வகை உடைகளை அணிவதும் கூட பலன் தரும். ஏனெனில் இந்த துணிகளில் பொடி ஒட்டுவதில்லை. நாம் லேசாக தட்டி விட்டால் கூட, அவை நீங்கிவிடும். அதுவே, மற்ற துணிகளில் வண்ணச்சாயம் ஒட்டிக் கொண்டு, வியர்வையுடன் சேர்ந்து நம் சருமத்தில் இறங்கும்.