திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டாலும், சொர்க்கத்தையே பூமிக்கு கொண்டு வந்த அளவுக்கு திருமணம் நடைபெறும் இடங்கள் பிரமிக்க வைக்கும் அலங்காரங்களோடு மின்னும். அது மட்டுமின்றி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு திருமணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதும் மாறி வருகிறது. முக்கியமான சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், திருமணங்கள் நடைபெறும் இடமும் சூழலும் பெரும்பாலான மாற்றங்களை கண்டுள்ளது. அதில் முக்கியமானது தீம் வெட்டிங் என்று கூறப்படுகிறது. மணமகனும் மணமகளும் தங்கள் விரும்பும் தீமில் அலங்காரங்களை செய்து திருமணம் செய்து கொள்வார்கள். இதற்கடுத்து பிரபலமாக இருப்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட பருவ காலத்தில் திருமணம் செய்து கொள்வதாகும். உதாரணமாக கடற்கரையில் திருமணம் செய்துகொள்வது. இதன் பெயர் டெஸ்டினேஷன் வெட்டிங் என்று கூறப்படுகிறது.
டெஸ்டினேஷன் வெடிங் வெளிநாடுகளில் பிரபலமாக இருந்து வருகிறது. இது ஸ்ப்ரிங் வெட்டிங், பீச் வெட்டிங், ஸ்நோ வெட்டிங் என்று திருமணம் நடைபெறும் இடத்தின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. இதேபோல இந்தியாவிலும் சமீப காலமாக சம்மர் வெட்டிங் மிகவும் பிரபலமாக இருக்கிறது. கோடை காலத்தில் அந்த பருவத்திற்கு ஏற்றவாறு அலங்காரங்கள் செய்யப்பட்டு திருமணம் கோலாகலமாக நடைபெறும்.
இந்தியாவில் கோடைக்காலம் கொளுத்தும் சூழ்நிலையில் இருந்தாலும் கோடை காலத்தில் சம்மர் வெட்டிங் மேற்கொள்வதற்கு மிகச்சிறந்த இடங்கள் உள்ளன. எல்லோருக்கும் இந்த டெஸ்டினேஷன் வெட்டிங் மீது விருப்பம் இருக்காது அல்லது எல்லோராலும் இதை செய்ய முடியாது என்றாலும், பாரம்பரியமாக பிரம்மாண்டமாக செய்யப்படும் திருமணங்களை விட டெஸ்டினேஷன் திருமணங்களுக்கு செலவு குறையும் என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் எந்தெந்த இடங்கள் சம்மர் வெட்டிங் டெஸ்டினேஷனுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
இயற்கை வண்ணங்கள் சூழ கோவா கடற்கரை திருமணம்:
கோவா சுற்றுலாவிற்கு மிகவும் பிரபலமானது என்றாலும், நீங்கள் கடற்கரையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் எக்கச்சக்கமான ஓய்வு விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் திருமணம் செய்து கொள்வதற்கான இடங்களைக் காணலாம். எளிமையாக மலர் அலங்காரங்கள் மற்றும் பளிச் வண்ணங்களில் திரைசீலைகள் மூலம் அலங்கரித்து, கடற்கரை, வானம் என்று திருமணத்தை சிறப்பாக மேற்கொள்ளலாம்.
ரிஷிகேஷ் - கொளுத்தும் கோடையில் குளுகுளு திருமணம்:
ரிஷிகேஷ் ஒரு புனித யாத்திரை ஸ்தலமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், இயற்கை அழகால் நிறைந்துள்ளது. கங்கைக் கரையில் நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், இதை விட சிறந்த நகரம் வேறு எதுவும் இல்லை. அது மட்டுமின்றி, ரிஷிகேஷ் குளிர்ச்சியான நகரம் என்பதால், கோடைக்கு ஏற்ற தலமாக இருக்கும்.
பசுமையான மலைகள் சூழ அழகான திருமணம் – பெல்லிங்:
சிக்கிமில் உள்ள பெல்லிங் என்ற இடம், ராட்சத மலைகள் சூழ ரம்மியமான அமைதியான சுற்றுபுறத்தில், உங்கள் திருமணத்தை நடத்தலாம். பெல்லிங் எவ்வளவு அழகான நகரம் என்பதை இன்னும் பலரும் அறியவில்லை. எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுலா வாசிகளின் கூட்டம் ஆகியவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
வெள்ளை மணல் தீவில் சம்மர் வெட்டிங் – ஹேவ்லாக் தீவு, அந்தமான்:
கடற்கரையில் அல்லது கொஞ்சம் பிரைவேட்டாக திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் அந்தமான் நிக்கோபாரில் உள்ள ஹேவ்லாக் தீவை, கண்களை மூடிக்கொண்டு தேர்வு செய்யலாம். ஹேவ்லாக் தீவுகள் கடற்கரை திருமணங்களுக்காகவே ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டது என்று கூறும் அளவுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வழக்கமாக கடற்கரையில் காணப்படுவது போல அல்லாமல், வெள்ளை மணலும் தெளிவான வானமும், நீலமும் பச்சையும் கலந்த கடலும், காக்டெயில் பார்ட்டி, மலர் அலங்காரம், இரவுத் திருமணம் என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் இடம்.
அரச குடும்பத்தைப் போன்ற திருமணம் – உதய்பூர் அரண்மனை:
உதய்பூர் மஹால் வெப்பமான மாநிலமான ராஜஸ்தானில் அமைந்திருந்தாலும், வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் இதமான வானிலையைக் கொண்டுள்ளது. திருமணத்தை ஆடம்பரமாக அரச குடும்பத்தின் திருமணம் போல நடத்த விரும்பினால், இதை விட சிறந்த நகரம் எதுவுமில்லை. இதேபோல், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட ராஜஸ்தானின் மற்ற நகரங்களில் உள்ள அரண்மனைகளிலும் முயற்சி செய்யலாம்.