நாய், பூனை, கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் அனைவரது வீடுகளிலும் வளர்ப்பு பிராணிகள் உண்டு. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் ஏராளமான கோழிகளும், நாட்டு நாய்களும் வளர்க்கப்படும். அதுவே நகர்ப்புற வீடுகள் என்றால் கட்டாயம் வெளிநாட்டு வகை நாய்கள் அல்லது உள்நாட்டிலேயே மிகவும் திறன் வாய்ந்ததாகக் கருதப்படும் ராஜபாளையம், சிப்பி பாறை போன்ற வகை நாய்கள் வளர்க்கப்படும்.
வளர்ப்பு பிராணிகள் சில விலை அதிகம் என்றாலும், வெளிநாடுகளில் இருப்பதைப் போன்ற விலை வர முடியாது. ஏனென்றால், அங்கு சிலர் வளர்ப்பு பிராணிகளின் பெயரில் சொத்துக்களை எழுதி வைத்திருப்பதால் அவை பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டவையாக இருக்கின்றன. உங்கள் வாழ்நாள் வருமானத்தையே கொடுத்தாலும் போதாது என்ற அளவுக்கு பணக்கார வளர்ப்பு பிராணிகள் குறித்து கேள்விப்பட்டது உண்டா? ஆம், அதுபோன்ற பிராணிகள் குறித்த பட்டியலைத்தான் இந்த செய்தி வாயிலாக அறிந்து கொள்ள இருக்கிறோம்.
டார்தார் சாஸ் : டார்தார் சாஸ் என்பது பூனை. இதனை கிரெம்பி கேட் என்றும் அழைக்கிறார்கள். அப்பாவியான, கோபம் கலந்த பார்வையை கொண்டிருப்பதால் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. சமூக வலைதளங்களிலும், அதில் வரும் மீம்ஸ்களிலும் இந்த பூனை மிகவும் பிரபலம். ஆனால், இதன் மதிப்பு ரொம்பவும் அதிகம் இல்லை. சுமார் 100 மில்லியன் டாலர்கள் மட்டுமே! திரைப்படம் ஒன்றிலும் நடித்திருக்கிறதாம்.