வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது என்ன படித்திருக்கிறார், வேலை, குடும்பப் பின்னணி என்று பொதுவாக பல விஷயங்களை ஆய்வு செய்வதை போலவே எமோஷனல் மெச்சூரிட்டி என்று கூறப்படும் மன முதிர்ச்சி அடைந்த நபரை தேர்வு செய்வது மிக மிக முக்கியம். மெச்சூரிட்டி இல்லாத நபர் என்று பலரை பார்த்திருப்பீர்கள். அவ்வாறு மெச்சூரிட்டி இல்லாத, மன முதிர்ச்சி அடையாத நபரிடம் எப்போதாவது பேசுவது என்பதே பிரச்சினைக்குரியதாக இருக்கும். இந்நிலையில் அது போன்ற நபரை வாழ்க்கை துணையாக தேர்வு செய்தால்? மேலும், எமோஷனல் மெச்சூரிட்டி என்று கூறப்படும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப சென்சிட்டிவாக நடந்து கொள்ளும் நபரை நம் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பது மிக மிக அவசியம்.
கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக, நீண்ட காலம் மகிழ்ச்சியாகவும் இருக்க, நல்ல புரிந்துணர்வு அவசியம். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி இருந்தால் தான் உறவில் பிணைப்பு அதிகரிக்கும். இக்கட்டான நேரத்தில், மோசமான கால கட்டத்தில் எமோஷனல் மெச்சூரிட்டி உள்ள நபர்கள் சரியான முடிவெடுப்பார்கள். அதே போல, சின்ன சின்ன விஷயங்களை எளிதாக கையாளுவார்கள். இதனால் உறவில் ஏற்படும் பல சிக்கல்கள் காணாமல் போய்விடும்.ஏன் எமோஷனல் மெச்சூரிட்டி நபரை உங்கள் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்
உங்கள் சுதந்திரத்தை மதிப்பார்கள் : உணர்ச்சிப்பூர்வமாக முதிர்ச்சி அடைந்த நபர்கள், வாழ்க்கைத் துணையாக இருந்தாலுமே கணவன் அல்லது மனைவியின் எல்லைகளை புரிந்துகொண்டு அவர்களுடைய பிரைவசிக்குள் தேவையின்றி நுழைய மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களை, விருப்பு வெறுப்புகளை மதிப்பார்கள். மேலும், நீங்கள் நீங்களாக இருப்பதற்கு உங்களுக்குரிய ‘ஸ்பேஸ்’ கொடுப்பார்கள்.
தனது உணர்வுகளை போலியாக வெளிக்காட்ட மாட்டார்கள்: பொதுவாகவே முதிர்ச்சி அடைந்த நபர்கள் தன் மனதில் இருப்பதை மறைக்க மாட்டார்கள். குறிப்பாக உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறுவார்கள். போலியான உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அல்லது சென்டிமென்ட் தூவியோ, பேசவே மாட்டார்கள். தன்னுடைய உணர்வுகளை வார்த்தைகளின் மூலமாகவும் செயல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தி விடுவார்கள்.
முழுமையாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் : எதையும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் முன்முடிவுகளை எடுக்கவே மாட்டார்கள். குறிப்பாக, உங்களைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரிய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமிருக்கும். நிறைய கேள்விகள் கேட்டு தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். அது மட்டும் இல்லாமல் உங்களை பற்றி நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது உங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதில் தீவிரமாக ஆர்வம் காட்டுவார்கள். எனவே எப்பொழுதுமே அவசரமாக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் முடிவு செய்யவே மாட்டார்கள்.
தயங்காமல் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள் : ஏற்கனவே கூறியுள்ளது போல ஒரு சூழ்நிலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது உணர்ச்சிப்பூர்வமாக முதிர்ச்சி அடைந்த நபர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே ஒரு சிக்கல் அல்லது இக்கட்டான சூழ்நிலையில் தானாக முன்வந்து தயங்காமல் பொறுப்பை ஏற்று கொள்வார்கள். மற்றவர்கள் மீது பழி சுமத்தவோ மற்றவர்களை எப்படியாவது மாட்டி விட வேண்டும் என்ற எண்ணமும் இவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்காது. எனவே முதிர்ச்சி அடைந்த நபர்களிடம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையும் நேர்மையும் இயல்பாகவே இருக்கும். இதனால் உறவில் ஏற்படும் சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் எளிதில் காணாமல் போய்விடும்.
வெவ்வேறு கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பார்கள் : ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொருவரின் பார்வையில் வெவ்வேறாக காணப்படும். எமோஷனல் மெச்சூரிட்டி உள்ள நபர்களுக்கு இது நன்றாக தெரியும்! எனவே சட்டென்று ஒரு முடிவை எடுக்காமல், ஒரு கருத்தைச் சொல்லாமல் வெவ்வேறு கண்ணோட்டத்திலிருந்து ஒரு விஷயத்தை அணுகுவார்கள். எதிர்மறையான கருத்துக்களைக் கூட இவர்களால் எளிதில் எதிர்கொள்ள முடியும். இந்த அடிப்படையில் இவர்கள் எடுக்கும் முடிவு மிகவும் சரியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் உணர்வுகளை மதிப்பார்கள் : மகிழ்ச்சி, ஏமாற்றம், கோபம், ஆத்திரம், வெறுப்பு, வெறுமை என்று எந்த விதமான உணர்வாக நீங்கள் வெளிப்படுத்தினாலும், உங்களுடைய கணவன் அல்லது மனைவி முதிர்ச்சி அடைந்தவராக இருந்தால், அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். உங்களை குறை கூற மாட்டார்கள். உங்கள் உணர்வுகளை மதித்து நடப்பார்கள். இதுக்கு போய் ஏன் அழுகை, சின்ன விஷயம், இதற்கெல்லாம் கோபமா என்றெல்லாம் ஏதேனும் காரணம் சொல்லாமல் உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடப்பார்கள்.