’ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே இந்தியக் கலாச்சாரம் ஆகும். அதே சமயம், தங்கள் வாழ்க்கைத் துணைக்கு தெரியாமல் ஒரு ஆணோ, பெண்ணோ மற்றொரு துணையை தேடிக் கொள்வதும் சில இடங்களில் இயல்பாக நடைபெறக் கூடியதாக இருக்கிறது. அதாவது, இந்த திருமணம் கடந்த உறவை பலரும் ரகசியமாக வைத்துக் கொள்கின்றனர். இதையொட்டி சண்டை, சச்சரவுகள் மற்றும் பிரிவுகள் போன்றவை ஏற்படுகின்றன.
அதே சமயம், கட்டுப்பாடுகளற்ற சுதந்திரத்தின் ஒரு அங்கமாக இன்றைக்கு தங்கள் வாழ்க்கைத் துணையின் சம்மதத்தோடு அல்லது அவர்களுக்கு தெரிந்தே திருமணம் கடந்த உறவை சிலர் கடைப்பிடிக்கின்றனர். இதை Open Relationship (வெளிப்படையான உறவு) என குறிப்பிடுகின்றனர். சுருக்கமாக சொல்வது என்றால் மனம் இணைந்து வாழ திருமண வாழ்க்கையை பயன்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், உடல் தேவைகள் மற்றும் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள வெளிநபர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
சுதந்திரம் : வெளிப்படையான உறவு என்பதை தேர்வு செய்த பிறகு, வெளி நபர்களை சைட் அடிப்பதில் எந்தவித சிக்கலும் இருப்பதில்லையாம். யாரை சைட் அடித்தோம், என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்பட்டது என்பதை பகிர்ந்து கொள்வதால் தம்பதியரிடையே நேர்மை அதிகரிக்கிறதாம். பிற நபர்களுடன் உடல் ரீதியான தேவைகள் பூர்த்தி அடைவதால், உணர்வு ரீதியாக இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றனர்.
முழு திருப்தி கிடைக்கிறது : தினசரி இரவில் அதே கணவன் அல்லது அதே மனைவியுடன் இணை சேர்வதால் வாழ்க்கை அலுத்துப் போய்விடுகிறதாம். குறிப்பாக, ஒருவருக்கு ஒருவர் செக்ஸ் தேவைகளை புரிந்து கொள்ள இயலாமல், அதுவே இருவருக்கும் இடையேயான இடைவெளியை அதிகப்படுத்துகிறது. ஆனால், பிற நபர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு உடல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் போது, கணவன் - மனைவி இடையேயான உணர்வுப்பூர்வமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த முடிகிறது.
நீண்ட கால பந்தத்திற்கு உத்தரவாதம் : வெளிநபர்களுடன் ரகசியமாக பழகும்போது ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கைத் துணையை பிரிந்து செல்கின்றனர் அல்லது புதியவரோடு இணையத் துடிக்கின்றனர். ஆனால், உடல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு, திருமண பந்தத்தை அப்படியே தொடர்வதால் அது நீண்டகால பந்தமாக இருக்கிறது. வாழ்க்கைத் துணையை மனதளவில் எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதே முக்கியமானதாக இருக்கிறது.