உங்கள் நெருக்கமான நண்பரோ அல்லது உங்களுக்குத் தெரிந்த வேறு எவரேனும் காதல் தோல்வியை சந்தித்து, கவலையினாலும் அதிகப்படியான மன உளைச்சலினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? ஆமெனில் அவர்களுக்கு கண்டிப்பாக உங்களுடைய உதவி தேவை. யாருக்குமே காதல் தோல்வி என்பது அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத மிகவும் கடினமானதொரு காலகட்டமாகும். இது போன்ற நேரங்களில் இதைப் பற்றி தன்னுடைய கவலைகளையும், மனகுமுறல்களையும் தாய் தந்தையுடனோ, சகோதரர்களுடனோ அல்லது நெருக்கமான உறவினர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாது. நல்ல நண்பர்கள் மட்டுமே இதற்கு நல்ல மருந்தாக அமைய முடியும்.
நட்பு என்பது எப்போதும் வெறும் கேளிக்கைகளுக்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமல்ல. இது போன்ற கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, ஒருவர் மற்றொருவரை விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் நீங்கள் வெறுமனே அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தால் கூட அவருக்கு தான் பேசுவதை கேட்பதற்காகவாவது ஒரு ஆள் இருக்கிறது என்பது ஒரு மனோ தைரியத்தை கொடுக்கும்.
கடினமான நேரங்களில் நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம் என்ன ஆனாலும் உன் கூட நான் இருக்கேன் என்று சொல்வதற்கு ஒரு நட்பு இருந்தால் எதை வேண்டுமானாலும் கடந்து வந்து விடலாம் என்ற ஒரு மன தைரியம் யாருக்குமே வந்துவிடும். வார்த்தைகளை விட அவர் துவண்டு இருக்கும் நேரங்களில் கட்டியணைத்தும், அழும் நேரங்களில் தோள் கொடுத்து நீங்கள் அவருக்காக எப்போதும் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலே போதுமானது.இதைப் பற்றி உளவியல் நிபுணரான திவ்யா மோஹின்றோம் என்பவர் காதலில் தோல்வியடைந்த நண்பர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதை பற்றி சில பரிந்துரைகளை அளிக்கிறார்.
மனம் விட்டு பேசுங்கள் : பெரும்பாலும் காதலில் தோல்வி அடைந்த ஆணோ பெண்ணோ தனிமையில் இருக்கவே விரும்புவர். இது ஒரு வகையில் சரியானது தான் என்றாலும் சில சமயங்களில் அவர்கள் இன்னும் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாவதற்கும் வாய்ப்பு அதிகம். எனவே நீங்கள் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசுங்கள் “இந்த நேரத்தில் நீ தனியாக இல்லை என்ன நடந்தாலும் நானும் உன்னுடன் இருக்கிறேன்” என்று நீங்கள் தரும் ஆறுதல் அவருக்கு பெரிய பலத்தை அளிக்கும்.
அவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்: உங்கள் நண்பர் என்ன தவறு செய்திருந்தாலும் “ஒருவேளை நீ இப்படி செய்திருக்கலாம், இல்லை அப்படி செய்திருக்கலாம்” என்று கூறுவதை விட, அவருடைய தவறுகளையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு முடிந்ததைப் பற்றி கவலைப்பட தேவையில்லை இனி ஆக வேண்டியதை பார்ப்போம் என்று ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை சொல்லலாம்.
வேறு செயல்களில் மனதை திசை திருப்பலாம்: எப்போதும் தனிமையிலேயே சோகப் பாட்டுடன் காணப்படும் நண்பரை வேறு ஏதேனும் செயல்களை செய்வதற்கு ஊக்குவிக்கலாம். யோகா, விளையாட்டு, நீச்சல் அல்லது ஒரு நீண்ட பயணம் ஆகியவை இது போன்ற சமயங்களில் நல்லதொரு மன அமைதியை கொடுக்கும். மேலும் அந்தக் கவலையிலிருந்து திசை மாற்றி ஒரு நல்ல வழியில் வாழ்க்கையை அமைக்க உதவும்.
முதலில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்: முக்கியமாக உங்கள் நண்பர் உங்களிடம் அவருடைய குறைகளையோ அல்லது ஏதேனும் யோசனையோ முன் வைக்கும் போது நீங்கள் அதனை அமைதியாக கேட்டுக் கொள்ள வேண்டும். அதில் உங்களை உணர்வு பூர்வமாக முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் சில சமயம் அது உங்களுக்கே கூட பாதகமாக முடியலாம். எனவே எப்போதும் உங்களுடைய மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.