உறவுகளில் பிரச்சனை வருவது சகஜம் தான். ஆனால், சின்ன சின்ன விஷயங்களுகுக் கூட, உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அடிக்கடி சண்டைகளும், முரண்பாடுகளும் ஏற்பட்டால், நீங்கள் மனவருத்தம் படும்படி பல்வேறு நிகழ்வுகள் காணப்பட்டால், உங்கள் உறவு ஆரோக்கியமானதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பின்வரும் நிகழ்வுகள், உறவில் நீங்கள் எவ்வாறெல்லாம் abuse செய்யப்படுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
தகாத வார்த்தைகளில் திட்டுவது : சண்டைகள், வாக்குவாதங்கள் என்று வரும் பொழுது கணவனோ அல்லது மனைவியோ ஒருவருக்கொருவர் திட்டிக்கொள்வது சாதாரணமானதுதான். ஆனால் பெரிதாக காரணம் இல்லாமல், மோசமான, தகாத வார்த்தைகளை சொல்லி சொல்லி உங்களை திட்டுவது, எப்போதுமே முறைகேடான வார்த்தைகளை பயன்படுத்தி உங்களை திட்டுவது என்றால், நீங்கள் மோசமான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!
மனக் கட்டுப்பாடு இல்லை : ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கு கோபமும் ஆத்திரமும் வரும். ஆனால் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் சரியான நேரத்தில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் எல்லாவற்றுக்குமே தீவிரமான எரிச்சலான மனநிலையில் உங்கள் கணவரோ மனைவியோ இருந்து அதை உங்கள் மீது வெளிப்படுத்துவது உறவை துஷ்பிரயோகம் செய்வதாகும்.
உங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது : கணவன் மனைவி உறவில் பரஸ்பர நம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை அவசியம். கணவர் சொல்வதை மனைவி கேட்பதும், மனைவி சொல்லும் சில விஷயங்களை கணவர் கேட்பதும் இயல்புதான். ஆனால் தான் சொல்லும் எல்லா விஷயங்களையுமே கேட்க வேண்டும், தான் சொல்வதை மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று முழுக்க முழுக்க உங்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தவறானது.
நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று தன்னை அப்பாவியாக முன்னிலைப்படுத்துவது : உங்கள் இருவருக்குள் வாக்குவாதங்கள் அல்லது முரண்பாடுகள் ஏற்படும் பொழுது, நீங்கள் மற்றவர் மீது தவறு இருப்பதை சுட்டிக் காட்ட முயற்சிக்கும் போது, தன்னை அப்பாவியாக காட்டிக் கொள்ள முயற்சி செய்வார். நீங்கள் எது சொன்னாலும் அது உங்கள் கணவரை அல்லது மனைவியை பாதிக்கிறது. அதுதான் அவருக்கு தான் பிரச்சனையாக முடிகிறது என்று உங்களை குழப்புவார்.