நம் அனைவரின் குடும்பத்திலும் எப்போதுமே நம்மை வெறுப்பேற்றும் ஏதாவது ஒரு உறவினர் கண்டிப்பாக இருப்பார். இவர்களை நாம் முடிந்தவரை தவிர்த்து வந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடும் நேரங்களிலும், விழாக்களின் போதும் இவர்களை தவிர்ப்பது சற்று கடினமான காரியம் தான். தேவையற்ற கேள்விகளை கேட்பதும், அதன் மூலம் நம்மை கடுப்பேற்றுவதுமை இவர்களின் முழு நேர வேலையாக இருக்கும். இப்படிப்பட்ட உறவினர்களை எப்படி எளிதாக கையாள்வது என்பதை பற்றி பதிவில் பார்ப்போம்.
எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள் : எவ்வளவு நெருக்கமான உறவினராக இருந்தாலும் அவரவருக்கு என தனித்தனி எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்களுடன் பேசும் போதும், பழகும் போதும் அவர்கள் அந்த எல்லைகளை கடந்து வராதவாறு அவர்களை வைக்க வேண்டும். அவ்வாறு எல்லை மீறும் பட்சத்தில் உண்டாகும் விளைவுகளை பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்துவது இன்னும் சிறப்பு.
தூண்டிவிடும் விஷயங்களை தவிர்க்க வேண்டும் : உங்களை கடுப்பேற்றிக் கொண்டிருக்கும் உறவினர்களுக்கு பிடித்த விஷயங்களையும் அவர்களைத் தூண்டிவிடும் விஷயங்களையும் அவர்கள் முன்னிலையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு அவருக்கு அரசியல் பேசுவது மிகவும் பிடிக்கும் எனில், அவர்கள் இருக்கும் நேரத்தில் அரசியல் பற்றி எந்த பேச்சையும் எடுக்கவே எடுக்காதீர்கள். இதைத்தவிர அவர்கள் அவ்வபோது கேட்கும் சிலர் தனிப்பட்ட விஷயங்களுக்கும் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்து விடுவதே நல்லது.
அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம் : இவ்வாறு நம்மை எப்போதுமே கடுப்பேற்றும் உறவினர்களில் சிலர் மனதளவில் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் உள்ள பிரச்சனைகளால் இதுபோன்று நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். அதுபோன்ற சமயங்களில் அவர்களின் நிலையையும் புரிந்து கொண்டு அவர்கள் கூறும் அனைத்திற்கும் ரியாக்ட் செய்யாமல் விலகி விடுவது நல்லது.
துணையை நாடுவது : அந்த உறவினரை உங்களால் சமாளிக்கவே முடியவில்லை எனில் முடிந்தவரை வேறொரு குடும்ப உறுப்பினரின் துணையை நாடுவது நல்லது. அவர்களிடம் உங்களது பிரச்சினையை கூறி, உங்களை வெறுப்பேற்றும் நபரை எப்படி கையாள்வது என்பதை பற்றிய வியூகங்களை நீங்கள் இருவரும் சேர்ந்து வகுக்கலாம். முக்கியமாக உங்கள் பெற்றோருக்கு உங்கள் உறவினர்களை பற்றி நன்றாக தெரியும்.
அவர்களிடம் இந்த பிரச்சனையை பேசுவதன் மூலம் உங்களுக்கான தீர்வு எளிதாக கிடைக்க வாய்ப்பு உண்டு. மேலும் அந்த கடுப்பேற்றும் உறவினரிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்னவென்றும் விஷயத்தை கூறி, அவர் உங்களை அடிக்கடி தொந்தரவு செய்கிறார் என்பதை பற்றியும் பெற்றோர்களிடம் கூறும் பட்சத்தில் உங்களுக்கான தீர்வுகள் மிகவும் எளிதாகவும் சுலபமாகவும் கிடைக்கலாம்.