கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கு, ஒருவர் அன்பு செலுத்தி, உண்மையாக வாழ்ந்தால் மட்டுமே தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆனால், ஏதோ சில காரணங்களால் உங்கள் வாழ்க்கை துணைக்கு உங்கள் மீதான ஈர்ப்பு குறையத் தொடங்கிவிடும் அல்லது திடீரென்று உங்களைவிட அழகான, திறமையான நபரை கண்டதும் மனதை பறிகொடுத்து விடுவார்கள்.
வழக்கத்திற்கு மாறான நடத்தைகள் : உங்கள் வாழ்க்கைத் துணையின் பழக்க, வழக்கங்கள் மற்றும் நடத்தைகள் திடீரென்று மாற்றம் அடையத் தொடங்கும். அவர்களின் தினசரி நடவடிக்கைகளில் எந்த காரணமும் இன்றி நீங்கள் மாற்றங்களை கவனித்தீர்கள் என்றால், அது ஏன் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். புதிய உறவு மலர்ந்துள்ளதன் வெளிப்பாடாக அது இருக்கலாம்.
ரகசியத்தன்மை அதிகரிப்பது : ஃபோன், லேப்டாப் அல்லது சமூக வலைதளங்களில் பாஸ்வார்டுகளை மாற்றி உங்களுக்கு தெரியாமல் ரகசியத்தன்மையை கடைப்பிடிக்கிறார்கள் என்றால் உங்களிடம் இருந்து எதையோ மறைக்கத் தொடங்கியுள்ளனர் என்று அர்த்தம். சிலர் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமூக வலைதளங்களில் பிறரிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருப்பார்கள்.
தோற்றத்தில் மாற்றம் : இதுநாள் வரையிலும் தன்னுடைய தோற்றம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக சுற்றிக் கொண்டிருந்தவர்களின் தோற்றத்தில் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுகிறது என்றால், அது பரிசீலனைக்கு உரிய விஷயமாகும். புதுப்புது ஆடைகள், சன் கிளாஸ் என்று சகலத்திலும் மாற்றங்களை பார்க்கலாம்.
வீட்டை விட்டு வெளியே இருப்பது : அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றோமா, திரும்பி வந்தோமா என்றிருப்பவர்களின் வாழ்க்கையில் திடீரென்று பல மாற்றங்கள் தென்பட தொடங்கும். காரணமேயின்றி வீட்டிற்கு தாமதமாக வருவார்கள். ஏதேதோ காரணங்களை சொல்லி வீட்டை விட்டு வெளியிடங்களில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். புதிய நபருடன் ஊர் சுற்றுவதன் அறிகுறி இதுவாகும்.
கண் தொடர்பை தவிர்ப்பது : உங்கள் வாழ்க்கை துணை உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான மிக முக்கியமான அறிகுறி இதுவாகும். எப்போதும் முகம் கொடுத்து பேச மாட்டார்கள். குறிப்பாக உங்கள் கண்களை பார்த்துப் பேசுவதை தவிர்த்து விடுவார்கள். குறிப்பாக, நேர்மை, விசுவாசம் குறித்து பேசும்போது அவர்களின் கண்கள் தடுமாறும்.