அணைப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து குறித்து அறிவியல் உலகம் ஆராய்ச்சி செய்துள்ளது. அரவணைத்தல், ஆரத் தழுவுதல், தொடுதல் போன்ற அனைத்திலும் ஒரே மாதிரியான உணர்வுகள் வெளிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 முறையாவது அணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
இதய நலனுக்கு நல்லது : ஆரத் தழுவும்போது நம் உடலில் ஆக்ஸிடைசின் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதுதொடர்பாக அமெரிக்காவின் கரோலினா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தங்கள் பார்ட்னரை கட்டி அணைக்காத நபர்களுக்கு நிமிடத்திற்கு இதயத்தில் 10 துடிப்புகள் கூடுதலாக இருப்பதும், பார்ட்னரை கட்டியணைக்கும் நபர்களுக்கு இதயத்தில் 5 துடிப்புகள் மட்டுமே அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.
குழந்தைகளை அணைக்கலாம் : பெற்றோர்கள் எப்போதுமே தங்கள் குழந்தையுடன் தொடுதல் உணர்வை கடைபிடிக்க வேண்டும். வளர்ந்த பிறகு பிறருடனான பந்தத்தை குழந்தைகள் அதிகரித்துக் கொள்ள இது உதவும். ஆதரவற்றோர் இல்லங்களில் அணைப்பு இல்லாமல் வளருகின்ற குழந்தைகள், பெற்றோரின் அணைப்பில் வளரும் குழந்தைகளை காட்டிலும் மனதளவில் தளர்ச்சி அடைந்தவர்களாக, தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருக்கின்றனர்.
அணைப்பு பெரியவர்களுக்கும் முக்கியமானது : பெரியவர்களுக்கும் கூட அணைப்பு என்பது முக்கியமான நடவடிக்கை ஆகும். இது தனிமை உணர்ச்சியை போக்கும். நாளொன்றுக்கு ஒருசில முறை அணைப்பவர்களுக்கு புத்துணர்ச்சி, உத்வேகம் போன்றவை கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் மன அழுத்தம் மிகப் பெரிய அளவில் குறைகிறதாம்.
பயத்தை குறைக்கும் : அச்சம், தன்னம்பிக்கை போன்றவை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு மனிதர்களுக்கு இடையே அணைப்பு ஏற்படும்போது அச்சம் குறைகிறது என்றும், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. குறைந்தபட்சம் 20 நொடிகளுக்கு நீங்கள் அணைக்கும்போது மகிழ்ச்சிக்குரிய ஆக்ஸிடைசின் ஹார்மோனின் சுரப்பு உடலில் அதிகரிக்கிறது.