வீட்டுக்கு, வீடு வாசற்படி இருப்பதைப் போல சண்டை, சச்சரவுகள் இல்லாத திருமண வாழ்க்கை ஏதேனும் இருக்க முடியுமா? இருக்காது தானே. ஆனால், அதற்காக வெறுமனே சண்டை, சச்சரவுகள் மட்டுமே இருந்தால் திருமண வாழ்க்கை கசப்பானதாகத் தானே இருக்கும். அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. ஆகவே, திருமண வாழ்க்கையை என்றென்றும் மகிழ்ச்சிக்குரியதாக வைத்துக் கொள்ள 5 எளிமையான ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குகிறோம்.
நடைமுறைக்கு ஒவ்வொத எதிர்பார்ப்புகள் : கணவனுக்கு மனைவியிடமும், மனைவிக்கு கணவரிடமும் சில எதிர்பார்ப்புகள் இருப்பது சகஜமான விஷயம் தான். ஆனால், அதற்காக நிலாவை பிடித்து கையில் கொண்டு வா என்று சொல்வதைப் போல நடைமுறைக்கு ஒவ்வொத விஷயங்களை எதிர்பார்க்க கூடாது. உங்கள் பார்ட்னரின் திறன் எதுவோ, அதற்கு ஏற்றபடி தான் அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்க வேண்டும். இல்லையென்றால், அது கருத்து வேறுபாடுகளுக்கும், கசப்புணர்வுக்கும் வழிவகை செய்யும்.
ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த கூடாது : நீங்கள் இருவருமே வெளிப்படையாக பேசிக் கொள்பவர்கள் என்றால், சில சமயம் அது எல்லை மீறிச் செல்லும் என்பதை மறுக்க இயலாது. உங்கள் தனியுரிமை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகிய இரண்டும் இடையே சீரான நிலையை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். உங்கள் கொள்கை, உங்கள் விருப்பம் என எப்போதும் ஒரே விஷயத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதோ அல்லது அதை ஏற்க வேண்டும் என்று உங்கள் பார்ட்னரை கட்டாயப்படுத்துவதோ கூடாது. உங்கள் பார்ட்னரின் கருத்துகளுக்கும் சம அளவு மரியாதை கொடுங்கள்.
அதிக உரிமை எடுத்துக் கொள்ள கூடாது : உங்கள் பார்ட்னர் உங்கள் சொத்து கிடையாது. எவ்வளவு காலம் நீங்கள் ஒற்றுமையாக வாழுகிறீர்கள் என்பது முக்கியம் கிடையாது. ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழுவதற்கும், மேம்படுத்துவதற்கும் உரிமை உண்டு. ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதுவே அவர்களுக்கு தொந்தரவாக அமைந்து விடக் கூடாது. பின்னர் உங்களிடம் இருந்து விலகி செல்ல அதுவே காரணமாகிவிடும்.
விமர்சனத்தை தவிர்க்கவும் : இதுதான் இருப்பதிலேயே மோசமான பழக்க, வழக்கம் ஆகும். இந்தப் பழக்கம் உங்களிடம் இருந்தால், அதை உடனடியாக விட்டு விடுங்கள். உங்களுக்காக உங்கள் பார்ட்னர் செய்யும் சின்ன, சின்ன விஷயங்களை பாராட்டி பழகுங்கள். அவ்வபோது உங்கள் பார்ட்னரை பாராட்டுவது உங்கள் மீதான நல்லெண்ணத்தை அதிகரிக்க வழிவகை செய்யும்.
இப்படித்தான் இருக்க வேண்டும் என தீர்மானிக்க முயற்சி செய்ய வேண்டாம் : எந்தவொரு நபரையும் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க முடியாது. உங்கள் பார்ட்னர் மிகச் சரியானவராக, கச்சிதமான பொருத்தம் உடையவராக இல்லாமல் போகலாம். ஒவ்வொரு மனித உயிருக்கும் தனி குணாதிசயம் உண்டு. அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அனுசரித்துச் சென்றால் வாழ்வில் மகிழ்ச்சி நிச்சயம்.