உங்கள் பார்ட்னரின் உடல் மொழிகளை கவனித்து, உங்கள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் பேசும் விஷயத்தை காது கொடுத்து கேட்கிறார்களா, நீங்கள் விரும்பும் விஷயமெல்லாம் அவர்களுக்கும் பிடித்திருக்கிறதா, உங்கள் பேச்சை எந்த அளவுக்கு உன்னிப்பாக கவனித்து கேட்கிறார்கள் என பல விஷயங்களை ஆய்வு செய்து, நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்.
கண் தொடர்பு: உங்கள் மனம் கவர்ந்தவர் உங்கள் கண்களை உற்றுப் பார்க்கிறாரா என்பதை கவனிக்கவும். இயல்பான விஷயங்களை பேசினாலும் அல்லது நகைச்சுவையாகப் பேசினாலும் உங்களை ஆழ்ந்து நோக்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். உங்கள் க்ரெஷ் மீதான ஈர்ப்பை நீங்கள் அதிகப்படுத்துவதற்கு முன்பாக, அவர்கள் எந்த அளவுக்கு உங்களை நேசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்: நீங்கள் நெருங்கிய நண்பர்களாக இல்லாவிட்டாலும் கூட, உங்கள் க்ரெஷ் உங்களிடம் ரகசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள தொடங்குவார். உங்களிடம் மனம் விட்டு, வெளிப்படையாக பேசுவதில் அவருக்கு எந்தவித தயக்கமும் இருக்காது. வாழ்க்கையை உங்களோடு தொடருவதற்கான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை உங்களிடம் அவர் எதிர்பார்க்கிறார் என்பது இதன் பொருளாகும்.
சின்ன விஷயங்களை கவனித்து வைத்திருப்பது: உங்கள் வாழ்வியல் முறை, பழக்க வழக்கம், அன்றாட நடவடிக்கைகள் என சின்ன, சின்ன விஷயங்களை கவனித்து வைத்து, அவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பேசத் தொடங்குகிறார்கள் என்றால் நிச்சயமாக அது காதல் தான். உங்களின் குழந்தை கால நினைவுகள், உங்களுக்கு பிடித்தமான நடிகர், நடிகைகள் அல்லது பிடித்தமான பாடல்கள் எதுவென்று கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
உங்கள் தொடர்பு விவரங்களை கேட்பது: இதுநாள் வரையில் நீங்கள் அலுவலகத்தில் அல்லது பணியிடத்தில் சந்தித்து பேசுபவர்களாக இருப்பீர்கள். இந்த சமயத்தில் உங்கள் மீதான நெருக்கம் அதிகரிக்க தொடங்கும்போது உங்கள் மொபைல் எண்-ஐ கேட்டு வாங்குவார்கள். ஏற்கனவே மொபைல் எண் அவர்களிடம் இருக்கும் பட்சத்தில் டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள முயற்சிப்பார்கள்.