எனவே யாருக்கு எப்போது வேலை போகும் என்ற பயத்திலேயே லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை கடத்தி வருகின்றனர். வேலை இல்லாத சூழல் நிறுவனங்கள் எடுக்கவும் நடவடிக்கையால் மட்டுமல்ல, அங்கு கொடுக்கப்படும் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள விரும்பாத பலரும் கூட ஒருகட்டத்தில் அடுத்த வேலையை தேடி கொள்ளாமல் தற்போது பார்த்து வரும் வேலையை விட்டு வரும் சூழலும் ஏற்படும்.
வேலை போகும் சூழல் எதுவாயினும் உங்கள் வாழக்கை துணை இது போன்ற ஒரு நெருக்கடி நிலையை எதிர்கொண்டால் நீங்கள் எப்படி அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் வேலையிழந்த நபர் எவ்வளவு மோசமான மனநிலையில் இருப்பாரோ, அதே மனநிலைக்கு நீங்களும் செல்ல கூடும். ஆனால் உங்களது சப்போர்ட் தான் அவரை மீண்டு எழ செய்யும்.
மனம் விட்டு பேச வையுங்கள் : பார்த்து கொண்டிருந்த வேலையை திடீரென இழப்பது அனைவராலும் சமாளிக்க கூடிய தருணம் அல்ல. ஒருவேளை அவர் தான் குடும்ப வருமானத்திற்கு முக்கிய ஆதாரம் என்றால் அஸ்திவாரமே ஆடிப்போனது போன்ற நிலையாக இருக்கும். இந்த நேரத்தில் விரக்தியின் உச்சத்தில் உங்கள் பார்ட்னர் இருக்க கூடும். எனவே அவரை உங்களிடம் மனம் விட்டு பேச அனுமதியுங்கள். உங்களிடம் பேசுவதன் மூலம் அவரது மனதில் உள்ள பாரம் கணிசமாக குறைய கூடும். நீங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்வதை விட, முதலில் அவர் பேச நினைப்பதை பேச விட்டு அவருக்கு ஆறுதலாக இருங்கள்.
சமாளிக்க போதுமான நேரம் : உங்கள் துணை திடீரென வேலை இழந்திருந்தால் அந்த அதிர்ச்சியை கடந்து செல்ல சில நாட்கள் அவருக்கு தேவைப்படும். தவிர குடும்ப வருமானத்திற்கு அவர் முக்கிய பங்கு வகிக்க கூடியவர் என்றால் இந்த பிரச்சனை அவரது சுயமதிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்த கூடும். எனவே நெருக்கடியான நேரத்தை கடந்து செல்ல அவருக்கு உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் அவரை பொறுமையாக கையாள வேண்டும். அவர் சில நாட்களுக்கு சோகமாகவே இருக்க கூடும். எனவே அவரிடம் பேசும் போது கனிவும், அக்கறையும் அவசியம்.
குற்றம்சாட்டதீர்கள் : உங்கள் பார்ட்னர் வேலையை இழந்து விட்டால் அவரிடம் கோபம் கொள்ளாமல் இருக்க நீங்கள் சிறப்பு முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவரின் வேலையின்மை குடும்பத்தை ஆட்டோமேட்டிக்காக பாதிக்கிறது. இத விளைவாக ஏற்படும் அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்களை குற்றம் சாட்ட வேண்டும் அல்லது கோபத்தை வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே எழும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அந்த உணர்ச்சிகளை கன்ட்ரோல் செய்து கொண்டு அவர்களிடம் பச்சாதாபத்துடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
ஆர்வத்தை ஊக்குவிக்கலாம் :வேலை போனது போனது தான், அதற்காக அவர்களை அப்படியே விட முடியாது இல்லையா.! உங்கள் துணை நன்றாக சமைக்க, ஓவியம் வரைய, ஆர்ட் & கிராஃப்ட் விஷயங்களை செய்ய, ஒர்கவுட்ஸ், டான்ஸ் என பலவற்றை செய்வதில் அல்லது கற்று கொள்வதில் ஆர்வம் காட்டினால் அவற்றை செய்ய அவர்களை ஊக்குவிக்கலாம். அவருக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபட வைத்து , அதை ஊக்குவித்து எப்படி அதை லாபகரமாக மாற்ற முடியும் என்பதை நீங்கள் பார்க்கலாம். ஏனென்றால் வேலைக்கு சென்றால் தான் வாழ முடியும் என்பதில்லை. அவருக்கு ஆர்வமாக இருக்கும் விஷயங்கள் மற்றும் அதில் வளர்த்து கொள்ளும் திறமையை வைத்து சுயதொழிலிலும் ஈடுபடலாம்.
அவர்களின் பலத்தை நினைவூட்டுங்கள் :வேலையிழப்பு மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் எல்லாமே ஒரு காலகட்டத்திற்கு மட்டும் தான். பல வாரங்களுக்கு அதையே நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க முடியாது. உங்கள் துணை இதுநாள் வரை வாழ்வில் சாதித்த விஷ்யங்களை அல்லது செய்து முடித்த விஷயங்களை அவருக்கு நினைவூட்டி அவரது பலத்தை அவருக்கே புரிய வையுங்கள். எதிலிருந்தும் மீண்டு வந்து சாதிக்க கூடிய திறமை அவர்களிடத்தில் இருக்கிறது என்பது அடிக்கடி நினைவூட்டுங்கள். தினசரி காலை எழுந்ததும் நம்மால் எதுவும் செய்ய முடியும் என்பது போன்ற உறுதிமொழிகளை மனதில் நினைத்து கொள்ள சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.