இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளான கவலை, மன அழுத்தம், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், மற்றும் சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாடு போன்றவற்றின் மூலம் நமது நாட்களைத் தொடங்குவது, மன அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கை முறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டும் அல்லாமல் அந்த மன அழுத்தப் பிரச்சினைகள் உங்கள் பாலியல் வாழ்க்கையையும் கூட பெரிதும் பாதிக்கிறது.
நீங்கள் நீண்ட காலத்திற்கு மன அழுத்தத்தில் இருந்தால், அது கார்டிசோல் மற்றும் எபிநெஃப்ரின் போன்ற ஹார்மோன்களை தூண்டுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஹார்மோனகள் உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கக் கூடும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கவும், சிறந்த பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் சில குறிப்புகளையும் அதன் செயல்பாடுகளை பற்றி இங்கே பார்க்கலாம்...
நல்ல உறக்கம் : உங்கள் உறக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது உங்கள் மன அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க நல்ல உறக்கம் நிச்சயம் தேவை. ஆனால் அதற்கு நேர்மாறாக, நீங்கள் சரியான தூக்கத்தை எடுக்காமல் ஓய்வெடுக்காமல் இருந்தால், இது உங்கள் ஆரோக்கியத்தையும் பாலியல் வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும். மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் : உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், பாலியல் உறவுக்கு உடலுக்கு தேவையான ஆற்றலையும் மனநிலையையும் அதிகரிக்க உதவுகிறது. எனவே வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் டி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், குறைந்த அளவிலான நிறைவுற்ற கொழுப்புகள், சர்க்கரைகள் மற்றும் சோடியம் ஆகியவை நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் பாலியல் உறவை அதிகரிக்க உதவுகிறது.
தினமும் யோகா செய்வது : உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீகம், மற்றும் சமன்பாட்டிற்கு உதவிடும் கலை இந்த யோகா கலை. தினமும் யோகா செய்வது உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்ற நிலைகளை குறைக்க உதவுகிறது. உடல் மற்றும் மனதின் தளர்வு நிலையை சரி செய்கிறது என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு யோகா சிறந்த ஒரு செயல்பாடாகக் கருதப்படுகிறது.
பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பது : நீங்கள் தனிமையாக இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மொபைலிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி உங்கள் அன்புக்குரியவர்களைச் சார்ந்து இருப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் பாலியல் தேவைகளை உங்கள் துணையுடன் தெரிவிக்கும் தைரியத்தையும் தரும். ஏனெனில், உங்கள் பாலியல் ஆரோக்கியம் மட்டுமல்லாது திடமான மனதிற்கு சமூக அமைப்பின் ஆதரவு இருப்பது மிகவும் அவசியமாகிறது.
மூச்சுப் பயிற்சி : ஆழ்ந்த சுவாசம் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்க்கப்பட வேண்டும், இது உங்கள் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை ஆக்டிவாக செயல்படுத்துகிறது. ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியான வாழ்க்கையை நடத்த உதவுகின்றன. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் பாலியல் வாழ்க்கைக்கு ஆழ்ந்த சுவாசம் என்பது மிகவும் இன்றியமையாததாகும்.