காதல் திருமணம் என்றாலும், வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிக்க வேண்டும். ஆனால், தொடக்கத்தில் ஒருவருக்கு, ஒருவர் அன்பாகவும், மரியாதை கொடுப்பவராகவும் வாழ்க்கை நகர்ந்து செல்லும். நாளாக, நாளாக இந்த எண்ணம் குறைய தொடங்கும்.அதே சமயம், நம் வாழ்க்கை துணையிடம் இருந்து என்றென்றும் அன்பு, மரியாதை ஆகியவை குறையாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த 5 விதமான உத்திகளை கடைப்பிடித்தால் போதுமானது.
நீங்கள் எதிர்பார்க்கும் அதே மரியாதையை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் :
உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது அன்பாகவும், அனோன்யமாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், அதை முதலில் நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். உங்கள் பார்ட்னர் உங்களுக்கான ஏதோ ஒரு நல்ல விஷயத்தை செய்யும்போது அதற்காக நன்றி சொல்லுங்கள். பின்னர் அதே குணம் அவர்களிடம் இருந்தும் வெளிப்படும்.
அதீத அக்கறை வேண்டாம் :
நம் பார்ட்னர் நம் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கும். ஆனால், அதுவே ஒரு எல்லையை மீறிச் செல்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். சில சமயங்களில் அதீத அக்கறை என்பது வெறுப்பை ஏற்படுத்தும். எந்தெந்த விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற வரையறையை முடிவு செய்து கொள்ளுங்கள்.
அவ்வப்போது பாராட்டுங்கள் :
ஏதேனும் ஒரு விஷயத்தில் நமக்கு மதிப்பளித்து நமது பார்ட்னர் நடந்து கொள்ளும்போது, நாம் அதை கண்டுகொள்ளாதவராக இருந்து விடக் கூடாது. உடனுக்குடன் அதை பாராட்ட வேண்டும். நாம் செய்யும் சின்ன, சின்ன விஷயங்களையும் நம் பார்ட்னர் கூர்ந்து கவனிக்கிறார் என்ற மகிழ்ச்சியை அது கொடுக்கும். மீண்டும் அதே நன்றியை உங்களிடம் அவர் வெளிக்காட்டுவார்.
உங்கள் பழக்க, வழக்கங்களை தொடர்ந்து செய்யுங்கள் :
வெளியிடங்களுக்கு நீங்கள் செல்வது அல்லது வெளியிடங்களில் நீங்கள் கடைப்பிடிக்கும் பழக்க, வழக்கங்கள் எதையும் உங்கள் பார்ட்னருக்காக நீங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயங்களில் அதுவும் ஒரு அங்கம் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவும்.
நண்பர்களை சந்திக்கவும் :
திருமண வாழ்க்கையில் நுழைந்த கையோடு நட்புகளை துண்டித்து விடாதீர்கள். எப்போதும் போல உங்கள் நண்பர்களை நேரில் சந்தித்து பேசுங்கள். அவ்வப்போது அவர்களுடன் வெளியூர் பயணங்கள், சுற்றுலா போன்றவற்றையும் நீங்கள் மேற்கொள்ளலாம். நீங்கள் உடன் இல்லாத சமயத்தில் தான் உங்கள் வாழ்க்கை துணைக்கு உங்கள் மீதான ஏக்கம் அதிகரிக்கும். அந்த ஏக்கம் தான் உங்கள் மீதான அன்பு அதிகரிக்க காரணமாக இருக்கும்.