‘சொல்லை கொட்டினால் அள்ள முடியாது’ என சொன்னது வெறும் வார்த்தை மட்டும் கிடையாது, உறவுகளுக்குள் சிக்கல் வெடிக்க காரணமாக இருப்பதே கோபத்தில் நாம் கொட்டித்தீர்க்கும் வார்த்தைகள் தான். குறிப்பாக கணவன் - மனைவி சண்டையின் போது கோபம், ஆற்றாமை, வெறுப்பு காரணமாக துணையை காயப்படுத்தக்கூடிய வார்த்தைகளை உபயோகித்துவிடுகிறோம்.
ஏதோ கோபத்தில் அர்த்தமில்லாமல் பேசிவிட்டாலும், பின்னர் சரி செய்வது என்பது மிகப்பெரிய சிக்கலாக மாறிவிடுகிறது. உங்கள் உறவுக்குள் மிகவும் தீங்கு விளைவிக்கும் சில விஷயங்கள் உள்ளன. இடம், பொருள் பார்க்காமல் உபயோகிக்கப்படும் வார்த்தைகள் தான், திருமண வாழ்க்கையில் விரிசலை உருவாக்குவதில் பெரும் பங்கை வகிக்கின்றன. கணவன், மனைவி என்றில்லாமல், உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் நீங்கள் ஒருபோதும் சொல்லக்கூடாத சில வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
‘உன் கூட இருந்து சலிச்சு போச்சு’: சின்ன, சின்ன சண்டைகளுக்கு கூட பொசுக்கென வீசப்படும் இந்த வார்த்தை உங்களது துணையின் இதயத்தை சுக்குநூறாக உடைக்க கூடியது. இந்த வார்த்தை கடுமையானது மட்டுமல்ல, ‘என் மீது அன்பே இல்லை’, ‘இத்தனை கால வாழ்க்கை அள்ளவு தானா’ போன்ற எதிர்மறையான எண்ணங்களை கொண்டு வரும். இத்தகைய எதிர்மறையான கருத்துக்கள், ஒப்பீடுகள் உறவுகளுக்கு சிக்கலை மட்டுமல்ல, பிரிவையும் கொண்டு வரும்.
‘நான் சொல்லுறத ஏன் கேட்கமாட்டேங்குற?’ : உங்கள் துணை நீங்கள் சொல்லும் எதையுமே கேட்க மாட்டார் என்றாலும், சண்டையின் போது இந்த வார்த்தையை பயன்படுத்துவது தேவையில்லாதது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தொடர்பு கொள்வதை ஒரு பொருட்டாக நினைக்காத போது, புறக்கணிக்கப்படும் போது அல்லது உங்கள் பார்ட்னர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படும் போது இது கட்டுப்படுத்தக்கூடிய வார்த்தையாக பயன்படுத்தக்கூடும். அதிக கோபமாக இருக்கும்போது இந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்வதால் சண்டை தான் வளருமே தவிர, புரிதல் பிறக்காது. எனவே அமைதியான சூழ்நிலையில் இருக்கும் தம்பதிகள் இதுகுறித்து மனம் விட்டு பேசுவது நல்லது.
‘நீ ரொம்ப சுயநலவாதி’: உங்கள் இணை உண்மையாகவே சுயநலம் மிக்கவராக இருந்தாலும், கோபம் கொந்தளிக்கும் தருணத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. இது ஒரு விமர்சன மற்றும் நியாயமான கருத்தாக இருந்தாலும், உறவில் தூரத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும். இதனால் உறவுக்குள் ஏற்படும் விரிசலை சரி செய்வது மேலும் சிக்கலானதாக மாறிவிடும்.
‘நீ மாறிவிட்டாய்’ : மாற்றம் ஒன்றே மாறாது என்பதை தம்பதிகள் உணர வேண்டும். காதலித்த காலத்திலோ, திருமணமான புதிதிலோ இருப்பது போல் ஒருவர் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது. ஒரு நபர் அல்லது உறவு எப்போதும் ஒரே மாதிரியாகவோ அல்லது நிலையானதாகவோ இருக்க முடியாது. ஆரோக்கியமாகவும், கலகலப்பாகவும், செழிப்பாகவும் இருப்பதற்கு பார்ட்னர்கள் இருவரும் தொடர்ந்து பரிணாமம் மற்றும் மாற்றம் பெற வேண்டும்.