நம்மில் பலர் தினசரி அலுவலகம் சென்று பணிபுரிபவராக இருக்கலாம். வெளியிடங்களை போலவே அலுவலகத்திலும் ஒருவர் தன்னுடைய நன்மதிப்பை பேணி காப்பது என்பது அவசியமாகிறது. சக பணியாளர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதமும், நம்முடைய சுய ஒழுக்கத்தையும் பொருத்தே நம்முடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆனால் சிலறோ மற்றவர்களை பற்றி எந்த வித கவலையும் கொள்ளாமல், தன்னுடைய சுய ஒழுக்கத்தை பற்றியும் எந்தவித கவலையும் கொள்ளாமல் இஷ்டம் போல அலுவலகத்தில் இருப்பார்கள்.
இது கண்டிப்பாக தவறானதொரு அணுகுமுறையாகும். இதன் விளைவுகள் உடனடியாக தெரியவில்லை என்றாலும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, உங்கள் மீது ஒரு நன் மதிப்பு இல்லை என்றால் கண்டிப்பாக உங்களுக்கான சரியான சலுகைகள் உங்களுக்கு கொடுக்கப்படாது. எனவே அலுவலகத்தில் ஒருவர் செய்யவே கூடாத முக்கியமான சில விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தனிப்பட்ட விஷயங்களை பற்றி ஃபோனில் பேசுவது : அலுவலகம் என்பது வேலை பார்ப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு சென்று உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளையும் அல்லது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் விதமாக அனைவருக்கும் கேட்கும் படி போனில் கத்தி கத்தி பேசிக் கொண்டிருப்பதும் கூடவே கூடாது. இது உங்கள் மீதான மதிப்பு குறைப்பதோடு மற்றவர்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும்.
நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களில் செலவிடுவது : அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தில் நீண்ட நேரம் உங்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்தி கொண்டிருப்பதும் அல்லது சமூக வலைத்தளங்களில் உலவி கொண்டிருப்பதும் கூடவே கூடாது. உங்களுக்கு கிடைக்கும் இடைவேளை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் சமூக வலைத்தளங்கள் மற்றும் மொபைல் போனில் நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லாதபோது வேலைக்கு வருவது : ஒருவேளை உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் முடிந்த அளவு அலுவலகத்திற்கு வந்து வேலை பார்ப்பது தவிர்க்க வேண்டும். ஏனெனில் உங்களுக்குள்ள நோய் தொற்று மற்றவருக்கு பரவி அனைவரையும் பாதிப்பு உண்டாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது போன்ற சூழலில் மேலதிகாரியின் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் அல்லது வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளலாம்.
உங்கள் காதல் விளையாட்டுகளை அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம் : அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தில் காதல் போன்ற தனிப்பட்ட விஷயங்களை அரங்கேற்றுவது தேவையில்லாத வேலை. அதிலும் முக்கியமாக அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் எவருக்கேனும் நீங்கள் வலைவீசி கொண்டு இருந்தால் கண்டிப்பாக அது பிரச்சினையில் முடிவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே முடிந்த அளவு அலுவலகம் நேரம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் காதல் விளையாட்டுக்களை பார்த்துக் கொள்ளலாம்.
விருப்பமின்றி வேலைக்கு வருவது : மிகவும் களைப்பாக வேலை பார்க்க முடியாத சூழ்நிலையில் அதே சிடுசிடுவென்ற முகத்துடன் வேலைக்கு வந்து வேலை பார்ப்பது என்பது முடிந்த அளவு தவிர்க்க வேண்டிய ஒன்று. ஒருவேளை அலுவலகம் வந்து வேலை பார்க்கும் அளவிற்கு உங்கள் மனநிலை சரியில்லாமல் இருந்தாலும் அல்லது விருப்பமின்றி இருந்தாலும் அன்றைய நாளில் விடுப்பு எடுத்துக் கொண்டு, உங்களை புதுப்பித்துக் கொள்ள சிறிது கால அவகாசம் எடுத்துக்கொண்டு அனைத்தும் சரியானதும் மீண்டும் அலுவலகத்திற்கு வரலாம்.