உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை அமைந்தால், அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வாழ்க்கையில் வேறு எதுவுமே இருக்காது! உங்கள் வாழ்க்கை முழுவதுமே அழகானதாக மாற்றிவிடும் சரியான நபர், உங்களுக்கு ஏற்ற நபர் உங்களுடன் பயணிக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கை மேம்படும். உங்கள் கனவுகளை அடைய, ஆறுதலாக, ஆதரவாக இருக்க, ஒருவரையொருவர் மேம்படுத்த என்று வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் கணவர் அல்லது நீங்கள் தேர்வு செய்யப் போகும் நபர் கச்சிதமானவரா, உங்களுக்கு பொருத்தமானவரா என்று தெரிய வேண்டுமா? இந்த விஷயங்களை உங்களுக்காக செய்கிறாரா என்று பாருங்கள்!
மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளாமல் உங்களை கவனித்துக் கொள்வார் : அன்பு, காதல் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது என்பது இரண்டு தரப்பில் இருந்து வர வேண்டும். பெண்கள் மட்டுமே ஆண்களை பராமரிக்க வேண்டும், கவனிக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. ஆணும், நான் நேசிக்கும் பெண்ணை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் பல ஆண்கள் தாங்கள் நன்றாக ஒரு பெண்ணை கவனித்துக் கொள்ளும் பொழுது அதை தன்னை சுற்றி இருப்பவர்களிடம் பெருமையாக கூறும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.
ஆனால், சிறந்த ஆண் உங்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால், அவர் உங்களை எந்த அளவுக்கு நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்பதைப் பற்றியும், உங்கள் மீது எவ்வளவு அக்கறையாக, அன்பாக இருக்கிறார், உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைப் பற்றியும் உலகுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை! அவர் அதை அமைதியாக செய்துவிட்டு போய்விடுவார். உலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி அவருக்குத் தேவையில்லை. உங்கள் பார்ட்னரின் கவனமெல்லாம் உங்கள் மீது மட்டும்தான்.
உங்களின் உணர்ச்சிபூர்வமான, மன ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வார் : உறவு நீடிக்கவும், வலிமையாகவும் மாற வேண்டும் என்றால், நீங்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். உங்களுடைய உணர்ச்சிபூர்வமான தேவைகளை பூர்த்தி செய்வதோடு, மன ரீதியாக எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார். குறிப்பாக, நீங்கள் உறவு குறித்த சந்தேகமோ, பயமோ, தனிமையில் இருப்பது போன்ற உணர்வோ அல்லது வெறுமையாகவோ உணரும் படி செய்யவே மாட்டாராம். அது மட்டுமில்லாமல், அவர் கவனத்தை உங்களை நோக்கி ஈர்க்க உங்களை கெஞ்ச வைக்க மாட்டார்.
வாக்குறுதியை நிறைவேற்றுவார் : சின்ன சின்ன விஷயங்கள் முதல் மிகப் பெரிய விஷயங்கள் வரை, உங்களுக்கு அளித்த வாக்குறுதியை தவறாமல் நிறைவேற்றுவார். பயம், தொல்லை, சோர்வு, அலுப்பு என்று எந்த காரணத்தையும் முன்னிறுத்தி, செய்வதாக சொன்னவற்றை தட்டிக்கழிக்க மாட்டார். இதன் மூலம், நீங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தனது குடும்பத்தினருக்கு உங்களை அறிமுகம் செய்வார் : இது காதலிப்பவர்களுக்கானது: காதலிக்கும் காலத்தில், இருவரும் மற்றவரின் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படும். உங்கள் காதலர் தனது குடும்பத்தினரை கட்டாயமாக சந்திக்க வைப்பார். நீங்களும் அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற விருப்பத்திலும், அவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
நீங்கள் இப்படித்தான் என்று முன்முடிவுகளை எடுக்க மாட்டார் : ஒரு நபரை எந்த அளவு சரியாக புரிந்து வைத்துள்ளோம் என்பது எல்லா உறவுகளுக்கும் முக்கியம். உங்கள் காதலர் உங்களை நன்றாக புரிந்து வைத்திருந்தால், உங்களுடைய பழக்க வழக்கம், உங்கள் பேச்சு, நீங்கள் எடுக்கும் முடிவுகள் என்று எதையுமே அவர் ‘ஜட்ஜ்’ செய்ய மாட்டார். உங்கள் முடிவு தவறாக போகும் போது, ‘எனக்கு அப்பவே தெரியும்’ என்று கேலி செய்யாமல், உங்களுக்கு ஆறுதல் சொல்வார்.