திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என பெரியவர்கள் கூறுவார்கள். அதற்கு அர்த்தம், வாழ்க்கை முழுவதும் இன்பம் மற்றும் துன்பத்தில் இரண்டிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்பதை தான் அப்படி கூறுகிறார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும். இது ஆணுக்கான செயல் பெண்ணுக்கான வேலை என எதுவும் இல்லை. எனவே, திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் சில அடிப்படை விஷயங்களை அறிந்து வைத்திருப்பது நல்லது. அந்த வகையில் ஒரு ஆண் மற்றும் பெண் தனது திருமணத்திற்கு முன் அறிய வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன என்று பார்க்கலாம்.
அடிப்படை சமையல் அறிவு : சமையல் என்பது பெண்களுக்கான வேலை மட்டும் இல்லை. ஆண்களும் செய்யலாம். தனது குடும்ப தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களது திருமணத்திற்கு முன்னர் குறைந்தது சாதம் வடிக்க கற்றுக்கொள்வது நல்லது. ஏனென்றால், வீட்டில் யாரும் இல்லை என்ற நிலைமையில் உங்கள் பசியை தீர்ப்பதற்கும் சமையல் அவசியம்.
மளிகை பட்டியல் : வீட்டிற்கு தேவையான பொருட்கள், சமையலறை பொருட்களின் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து ஆண் -பெண் இருவரும் அறிந்து வைத்திருப்பது நல்லது. மேலும், வீட்டிற்கு தேவையான பொருட்களை பட்டியலிடவும் அறிந்து வைத்திருப்பது நல்லது. ஏனென்றால், இது மாத செலவை கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும்.
குழந்தை வளர்ப்பு குறித்த அடிப்படை அறிவு : குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்றாலும், திருமணத்திற்கு முன் ஆண் -பெண் இருவரும் அடிப்படை குழந்தை வளர்ப்பு முறை, மகப்பேறு சிக்கல்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. இந்த விஷயங்கள் உங்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு உதவும்.
பேச வேண்டிய இடம் மற்றும் பொருள் : திருமணத்திற்கு பின்னர் ஆண் -பெண் இருவரும் தனது குடும்பத்தை நிர்வகிக்கும் நிலைக்கு முன்னேறுகிறார். அந்தவகையில்,தனது குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பெண்கள் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி பேசவேண்டும், எப்போது அமைதி காக்க வேண்டும் என புரிந்து வைத்திருப்பது நல்லது. இது ஆண்களுக்கும் பொருந்தும்.
சுயமாக சிந்தித்தல் : திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளை பெற்றோர் துணை இன்றி தனியே எதிர்கொள்வது எப்படி, சமாளிப்பது எப்படி என ஆண் -பெண் இருவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதேப்போல், கணவரின் துணை இன்றி ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க அறிந்து வைத்திருப்பதும் நல்லது. ஆனால், அதை செய்வதற்கு முன் இருவரும் கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.
திருமணம் குறித்த சட்டம் : திருமணம் செய்த பின் ஒரு பெண்ணுக்கு தனது புகுந்த வீட்டில் கிடைக்கும் உரிமைகள் என்ன, பிறந்த வீட்டில் கிடைக்கும் உரிமைகள் என்ன என்பது குறித்து அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. அத்துடன், கணவன் மற்றும் மனைவி சம்மந்தமான சட்டங்களையும் ஆண் -பெண் இருவரும் தெரிந்து வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.