உறவுகளின் அடித்தளமே புரிந்து கொள்ளுதல் மற்றும் விட்டுக்கொடுத்தலைக் கொண்டே கட்டியமைக்கப்படுகிறது. ஒருவருடன் நமக்கு இருக்கும் உணர்வுப்பூர்வமான பந்தமானது மெல்லிய கண்ணாடியைப் போன்றது. அதனை பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்கும் நாமே சில சமயங்களில் வார்த்தை எனும் ‘கல்’ வீசி அதனை துண்டு துண்டாக சிதறிடித்துவிடுகிறோம். குறிப்பாக உங்கள் வாழ்க்கை துணையிடம் நீங்கள் வீசும் வார்த்தைகள் அவர்களை அதிகம் காயப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒற்றை வார்த்தையில் பதிலளிப்பது என்பது எப்போதுமே உங்கள் துணையை எரிச்சலடைய வைக்கும் செயலாகும். எதையோ மனதில் மறைத்து வைத்துக் கொண்டு நீங்கள் பேசுவதாக உங்கள் பார்ட்னர் நினைக்க வாய்புள்ளது. ‘OKAY, FINE, GOOD’ போன்ற வார்த்தைகள் மறைமுகமாக உறவில் எதிர்மறையான தொனியை உருவாக்குகின்றன. உதாரணமாக, ‘நான் நன்றாக இருக்கிறேன்’ அல்லது ‘நான் நலமாக இருக்கிறேன்’ என்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தும் தொனி கூட உறவில் விரிசல் விழ வைக்கும். இந்த 3 வார்த்தைகள் உங்களுடன் இருப்பவரை எப்படி பிரிக்கிறது என்பதைப் பார்க்கலாம்..
உரையாடலை துண்டிக்கும்: ஓகே, ஃபைன், குட் போன்ற வார்த்தைகளை கூறுவது, உங்கள் துணையை அடுத்தடுத்து உரையாட எந்தவித சந்தர்ப்பமும் கொடுக்காமல் தடுக்கும் செயலாகும். இந்த பொதுவான வார்த்தைகள் உங்கள் துணையுடன் உங்களுடன் உரையாடுவதை உடனடியாக நிறுத்துகின்றன. எனவே கோபம், வருத்தம் எதுவாக இருந்தாலும் முழுவதும் பேசாமல் ஆரம்பத்திலேயே நீங்கள் என்டு கார்டு போட்டுவிடுவது நல்லது அல்ல. எதிர் தரப்பில் இருப்பவரை பேச விட்டு, அதனை நன்றாக காதில் வாங்கிக்கொண்டு பேச வேண்டும்.
வார்த்தை உபயோத்தில் கவனம் தேவை: இது போன்ற வார்த்தைகளை நீங்கள் கூறும்போது, நீங்கள் உண்மையில் நன்றாக இல்லை என்பதை அது உணர்த்துகிறது. உங்கள் பார்ட்னர் அல்லது உங்களிடமே நீங்கள் கோபமாகவோ அல்லது விரக்தியாகவோ இருக்கலாம், மேலும் இது போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பதன் மூலமாக பார்ட்னரிடம் இருந்து விலகிச் செல்ல முயல்வது போல் தோன்றும். மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம், ஏனென்றால் நீங்கள் அதைச் செய்யாவிட்டால், அது உங்களுடனான உறவு பற்றி பார்ட்னர் நினைத்திருக்கும் எண்ணத்தை மாற்ற உதவாது.
தவறான தகவல் பரிமாற்ற முறை வேண்டாம்: எப்போதும் ஊடல் தான் காதலை அழகாகவும், புரிதல் உள்ளதாகவும் மாற்றுகிறது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் உறவுகளுக்குள் சிக்கல் என்று வரும் போது தொடர்பு கொள்ள வேண்டியது மிக முக்கியமானது ஆகும். அப்படி உங்கள் பார்ட்னரை தொடர்பு கொள்ள நினைத்தால் எந்த ஒரு தவறான தகவல் பரிமாற்றத்தையும் தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் உங்கள் பார்ட்னர் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வமாக இருக்கலாம், அந்த சமயத்தில் நீங்கள் தொடர்பு கொள்ளாமல் இருப்பது உறவை முறித்துக்கொள்ள தூண்டலாம்.