

ஆண் குழந்தையானாலும், பெண் குழந்தையானாலும் அவர்களுடைய முக்கியமான தருணங்களில், வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்வதில் அப்பாக்கள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குவார்கள். நம் வாழ்க்கையில் புதிதாக எடுத்து வைக்கும் அடிகளிலெல்லாம் முதல் நண்பனாக கைக்கொடுத்து வரவேற்பதும், தோல்விகளின் போது தட்டிக் கொடுப்பதும் தந்தையாக மட்டுமே இருக்க முடியும். அப்படி எந்தெந்த தருணங்களிலெல்லாம் அப்பாக்களின் பங்கு முக்கியமானது என்று பார்க்கலாம்.


முதல் பயணம் : நடை வண்டி வாங்கிக் கொடுத்து நடக்கக் கற்றுக் கொடுத்தது மட்டுமன்றி பறக்கவும் கற்றுக்கொடுத்தவர் தந்தையாகத்தான் இருக்க முடியும். சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்தது, பைக் , கார் என முதன் முதலில் நம்மோடு இருந்து பிடித்துக்கொண்டு கற்றுக்கொடுத்தது அவர்தான்.


பேசுவது : ஒருவரிடம் எப்படி பேச வேண்டும், குறிப்பாக பெண்களிடம் நடந்துகொள்ளும் ஒழுக்க நெறிகளையும் தந்தையிடமிருந்தே கற்றுக்கொள்கின்றனர். உலகை எதிர்கொள்ள மற்றவர்களுடன் எப்படி பேச வேண்டும் , நடந்துகொள்ள வேண்டும் என்பதிலும் அப்பாவின் பங்கு முக்கியமானது.


தவறுகளை ஏற்றுக்கொண்டவர்: தவறுகளிலிருந்தே சரியானதைப் பெற முடியும் என என்னை தவறு செய்ய அனுமதித்ததும் அப்பாதான். முதல் தவறை ஏற்றுகொண்ட தந்தை அதிலிருந்து எப்படி சரியானதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாதைக்கு அழைத்துச் சென்றதும் தந்தையாகத்தான் இருக்க முடியும்.


பொருப்புகள் : இன்று வீடு, கமிட்மெண்ட்ஸ் என பொருப்போடு இருக்கிறீர்கள் என்றால் அது தந்தை உங்களுக்குக் கற்றுக்கொடுத்த மிகப் பெரிய பாடம். அதுதான் வாழ்க்கையில் சிறந்த மனிதனாக வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.