நாம் ஒவ்வொருவரும் அனைவரது முன்னிலையிலும் சிரித்து கொண்டு வாழ்ந்தாலும் சிலநேரங்களில் மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இது எதனால் நிகழ்கிறது என குறிப்பிட்டு கூற இயலாது. ஏனெனில் இது ஒவ்வொருக்கும் வித்தியாசப்படுகிறது. இது ஏன் நிகழ்கிறது? அதைப்பற்றி உளவியல் சொல்வது என்ன? என்பது குறித்து இங்கு காண்போம்.
உங்களை மகிழ்ச்சியற்றவராக மாற்றுவது எது? ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்க்கையில் திருப்தியுடன், மகிழ்ச்சியாக இருக்கிறார் என சொல்வது கடினம். ஏனெனில் நாம் பெரும்பாலும் சிரிப்பை மகிழ்ச்சி என தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம். மேலும் ஒரு குறிப்பிட்ட நபர் தனியாக அவரது மன அழுத்தங்களுடன் போராடும்போது, அவர் மகிழ்ச்சியாக இல்லை என கருதுகிறோம். ஆனால் அது அப்படியிருக்க வாய்ப்பில்லை. மக்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியற்ற தருணங்களை எதிர்கொள்ளும் போது, கடினமாகவும், சோகமாகவும் உணரலாம். அது ஏன் என்று குறிப்பிட்டு சொல்வது மிகவும் கடினம்.
கடந்த காலத்தை நினைத்து வருந்துவது : ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கடந்த காலம் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. அதுவே தற்போதைய நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. இருப்பினும், கடந்த காலத்தில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மட்டுமே எப்போதும் அசைபோட்டுக் கொண்டிருப்பதால் நிகழ்காலம் வீணாகிறது. இதனால் காலப்போக்கில் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
ஒருவரின் வாழ்க்கையை மோசமான குழந்தைப்பருவம், பாசமற்ற உறவுகள், ஈடுசெய்ய முடியாத நிதி இழப்பு போன்றவை பாதிக்கலாம். ஆனால் இவையனைத்தும் வெறும் நிகழ்வுகள் தான். இந்த நிகழ்வுகளால் உங்களின் தற்போதைய வாழ்க்கை பாதிக்குமாறு நடந்து கொள்ள வேண்டாம். உங்களால் இழந்ததை அல்லது ஏற்கனவே நடந்த விஷயங்களை, மாற்ற முடியாது. ஆயினும் நீங்கள் கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு, வரும் எதிர்காலத்தை பிரம்மாண்ட அழகுடையதாக கட்டமைக்க முடியும்.
மனக்கசப்புகளை நினைத்து கொண்டிருப்பது : வாழ்க்கை என்பது வருத்தங்கள் மற்றும் மனக்கசப்புகளால் நிறைந்ததுதான். ஆனால் நீங்கள் அதைப்பற்றி தொடர்ந்து கவலைப்படுவதால், அது உங்களின் நிகழ்காலத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருக்கிறது. மனக்கசப்புகளை எல்லாம் விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு, உங்களைத் தவறாக நடத்தியவர்களை பழிவாங்குவதற்காக நீங்கள் காத்திருப்பதால், உங்கள் நேரம்தான் வீணாகிறது. இதனால் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்து எதிலும் நாட்டமிலாத நிலை ஏற்படும். எனவே மனக்கசப்பு எண்ணங்களில் இருந்து வெளியே வாருங்கள். உங்களின் கடந்த காலம் எவ்வளவு, கசப்பாக இருந்தாலும், நிகழ்காலத்தில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி சிந்தியுங்கள்.
மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற கவலை : எப்போதும் நம்மை மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது குறித்து கவலைப்பட கூடாது. ஏனெனில் மற்றவர்கள் பேசுவதை ஒருபோதும் நம்மால் தடுக்க முடியாது. எனவே மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதற்காக உங்கள் நடத்தையை மாற்ற முயற்சிக்காதீர்கள். ஒரு சமூகத்தில், விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதேஅளவு நீங்கள் உங்கள் மனம் சொல்வதையும் கேட்டு நடப்பதும் முக்கியம். நீங்கள் உங்கள் அக்கம்பக்கத்தில் உள்ள மக்களைப் பற்றி தொடர்ந்து கவலைப்படுவதால் மகிழ்ச்சியாற்றவராக மாறுகிறீர்கள். எனவே உங்களது செயல்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் போதும் என நினைத்து வாழுங்கள்.
கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள் : கடந்த காலத்தைப் போலவே, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் நீங்கள் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ளலாம் அல்லது உங்களின் சில வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை செய்து உங்களின் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், ஆனால் நீங்கள் எதுவும் செய்ய முடியாத சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை எல்லாம் நீங்கள் விட்டுவிட வேண்டிய நேரமிது. அடுத்து என்ன நடக்கப்போகிறது, எப்படி நடக்கப்போகிறது என்று யோசிப்பதால், கவலைகளும் மன அழுத்தங்களும் தான் அதிகரிக்கிறது. எனவே நிகழ்காலத்தில் உள்ள அழகான தருணங்களை ரசிக்க கற்று கொள்ளுங்கள்.
உங்கள் முடிவில் நம்பிக்கையின்மை : அனைவரும் சின்ன சின்ன தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள், அது தவிர்க்க முடியாதது. நீங்கள் செய்யும் செயல்கள் நல்ல படியாகவும் முடியலாம், தவறான திசையிலும் செல்லலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட முடிவுக்காக உங்களை நீங்களே குற்றம் சாட்டுவது என்பது உங்களின் மனதை அதிகம் பாதிக்கும். மோசமானதை பற்றி மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டாம். ஆனால் நீங்கள் உங்களையும், உங்கள் செயல்களையும் நம்புவது மிகவும் முக்கியம். அப்போதுதான் அடுத்தடுத்த விஷயங்களை உங்களால் சரியாக செய்ய முடியும்.