'காதலுக்கு கண் இல்லை', 'காதல் ஜாதி மதம் பார்த்து வராது', 'காதல் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் வரும்', இது போன்ற ஏகப்பட்ட சினிமா வசனங்களை காதலுக்கு சப்போர்ட் செய்து பேசும் நபர்கள் பேச கேட்டிருப்போம். பெரும்பாலான திரைப்படங்களில் பல ஹீரோக்கள் இதுபோன்ற காதல் வசனங்களை கூறி இருப்பதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம் இதுபோன்ற வசனங்களை மக்கள் பலரும் நம்பி சினிமாவில் வருவதைப் போலவே காதலிப்பதும் உண்டு. ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சினிமாவில் இருக்கும் காதலைப் போல நிஜ காதல் இருப்பதில்லை.
ஈர்ப்பின்றி காணப்படுதல் : ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பு குறைவது. பார்க்க வேண்டும், பேச வேண்டும், ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் உதாரணமாக முத்தம், கட்டிப்பிடித்தல் காதலை கூறுவது என இவைகள் குறைய ஆரம்பிப்பது எல்லாம், உங்கள் காதல் வாழ்க்கை முடிவு பெற போகிறது என்பதற்கான அறிகுறிகள்தான். உங்கள் காதலன் அல்லது காதலியை தாண்டி வேறொருவர் மீது உங்களது ஈர்ப்பு, திசை மாறி செல்கிறது என்றாலே, நீங்கள் உங்கள் உறவில் தோல்வியுற்றுவிட்டீர்கள் என்று தான் அர்த்தம். இதற்கு மேலும் போலியாக நடித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, பிரிந்துவிடுவதே மேல்.
தொலைவில் இருப்பது போல் ஓர் உணர்வு: நீங்கள் எப்போது தொடர்பு கொள்ள நினைத்தாலும், ஏதேனும் காரணம் சொல்லி தட்டிக்கழிக்க முயற்சிப்பது, மீண்டும் கூப்பிடுகிறேன் என்று கூறி, நேரம் கழித்து கூப்பிடுவது அல்லது மறந்துவிட்டதாக நடிப்பது போன்றவை விரிசலுக்கான உச்சக்கட்ட அறிகுறிகளாகும். இதை வைத்தும் நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் அம்பியின் அண்ணனாகவோ, தம்பியாகவோதான் இருக்க வேண்டும். முன் உங்களின் கால் அல்லது SMSக்காக காத்திருந்த நபர் இப்பொழுது உங்களிடம் ஏதேனும் அழைப்பு வந்தால் உதாசீனப்படுத்துவதையும் விரிசலின் அறிகுறிகளாக கருதலாம்.
கோபம் எனும் மாஸ்க் : தேவையில்லாத சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம், நீங்கள் கடுகு போல வெடிக்க ஆரம்பித்தல், ஓரிரு வார்த்தைகள் அதிகம் பேசினால் கூட, “சும்மா நச்சரிக்காத, என கூறுவது போன்றவை முக்கியமான விரிசலுக்கான அறிகுறிகள் ஆகும். காதலர்கள் இருவர் ஒன்றாக இருந்தால், அவர்களை சுற்றியிருக்கும் எதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கத்திற்கு மாறாக, உங்கள் காதலன்/காதலி அருகாமையில் இருக்கும் நேரத்திலும் கூட, சுற்றி இருப்பதை நோட்டம் விடுவது. சலித்து போய் அமர்ந்திருப்பது போன்றவை அல்லது விருப்பமில்லாமல் இருப்பதும் விரிசலுக்கான காரணங்கள்தான்.
உதாசீனப்படுத்துதல் : முன்னர் நீங்கள் இருவரும் கலந்து செய்யும் வேலைகளுக்கு இப்போது உங்களை ஆலோசிக்காமல் அவர் மட்டுமே முடிவை எடுக்கிறாரா. அப்படி என்றால் அந்த வேலைக்கு நீங்களாகவே எதையாவது சொன்னால் உங்கள் சொல்லுக்கு மதிப்பு இருக்காது, நீ என்ன சொல்வது, நான் என்ன செய்வது என்ற வகையில் உங்கள் உறவு பயணிக்க ஆரம்பிக்கும். இருவரும் ஒன்றாக வெளியிடங்களுக்கு செல்ல, பேச, ஒன்றாக இருக்க நேரம் ஒதுக்குவதை வீண் வேலை என்று எண்ண தொடங்குவது.
ஒருவித எரிச்சல் மனநிலை : உங்கள் நண்பன் ஒருமுறை கூறிய விஷயத்தை மறுமுறை கூறினாலே, புருவங்கள் உயர்த்தும் நீங்கள், முன்பு உங்கள் காதலி 100 முறை ஒரு விஷயத்தை கூறினாலும், ரசித்து கேட்டுக்கொண்டிருப்பீர்கள். ஆனால் இப்போதோ இது மாறி, அவர் என்ன பேசினாலும், போதும் நிறுத்து என்றும் நீ பேசினாலே என் காதில் ஆசிட் ஊற்றியது போல இருக்கிறது என்று சொல்ல வைக்கும் நிலை ஏற்பட்டாலோ, உங்கள் லவ்தீக வாழ்க்கை முற்று பெற போகிறது என்று அர்த்தம்.
எதற்கெடுத்தாலும் சந்தேகம் : பொஸசிவ்னஸுக்கும், சந்தேகத்திற்கும் ஒரு மெல்லிய கோடுதான் வித்தியாசம். அதன் அடுத்த கட்டம் தான் இந்த சந்தேகம். வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுக்குள் வரவே கூடாத ஒன்று சந்தேகம். வாழ்க்கையை நரகமாக மாற்றும் சக்தி சந்தேகத்துக்கு உண்டு. பல காதலில் புகுந்த சந்தேகப்பேய், உங்கள் காதலையே புரட்டிப்போட்டு, சில இடங்களில் உயிரையும் குடித்திருக்கிறது. அதனால் சந்தேகம் என்ற பேயை மனசுக்குள் விடாதீர்கள். அப்படி உங்களுக்கு எதாவது தோன்றினால் அதை உடனே உங்கள் காதலன்/காதலியிடம் கலந்து பேசி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சந்தேகத்தை வளரவிட்டால் அது வெட்ட முடியாத முள் காடாக வளர்ந்துவிடும்.
ஸ்மார்ட்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்ல ஆணுக்கும், பெண்ணுக்கும் தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அது அந்தக் காலம். இன்றோ பல 90ஸ் கிட்ஸ்கள் மற்றும் 2K கிட்ஸ்கள் தங்கள் காதலை பொசுக் பொசுக்கென்று முறித்து விடுகின்றனர். அதுவும் வெளிப்படையாகவே மேற் சொன்ன அறிகுறிகளை கொண்டிருந்தால் அவர்களின் காதல் அழிவின் விளிம்பில் உள்ளது என்று அர்த்தம். உங்கள் காதல் எந்த நிலையில் உள்ளது என்பதை செக் பண்ணிட்டீங்களா...!