பெண்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைவதற்கு கணவர்களின் பொறுப்பான நடத்தை முக்கிய காரணமாகும். பொறுப்பற்ற மனிதனை திருமணம் செய்து கொண்டுள்ளோமே என்று வாய் விட்டு புலம்புவதையும், சண்டையில் கத்துவதையும் பார்க்கலாம். நீங்கள் எப்படிப்பட்ட கணவரை கொண்டுள்ளீர்கள் என்று உங்களுக்கு குழப்பம் இருந்தால் உங்கள் கணவர் பொறுப்பற்றவர் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் என்னவென்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்களும் உங்களது மற்ற குடும்ப உறுப்பினர்களும் வீட்டின் மீது அக்கறை கொண்டு வீட்டுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்து குடும்பத்தை கவனித்து கொள்ளும் அதே நேரம், உங்கள் கணவரை எவ்வளவு கேட்டு கொண்டும் அவர் வீட்டை கவனித்து கொள்ளாவிட்டால் நீங்கள் ஒரு பொறுப்பற்ற துணையை கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அலுவலகத்திற்கு சென்று விட்டோ அல்லது வெயில் சென்று விட்டோ வீட்டிற்கு தாமதமாக வருவது என்பது என்றாவது ஒருநாள் நடந்தால் ஏற்று கொள்ளலாம். ஆனால் முக்கியமான நிகழ்வுகள் வீட்டில் இருக்கும்போது அல்லது வெளியே செல்ல திட்டமிட்டிருக்கும்போது அடிக்கடி தாமதமாக வந்து போட்டிருக்கும் பிளானை சொதப்புவது அவர் ஒரு பொறுப்பற்ற நபர் என்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளின் பிறந்தநாள் அல்லது உங்கள் இருவரின் திருமண நாள் போன்ற முக்கிய நாளில் தாமதம் என்பது தவிர்க்க முடியாத சில காரணங்களை தவிர ஏற்று கொள்ள முடியாதது. முக்கிய நாட்களில் நேரத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது.
தனக்கான சிறு சிறு வேலைகளை தன்னால் செய்து கொள்ள ஒரு பொறுப்புள்ள நபரால் முடியும். ஆனால் உங்கள் கணவர் சாப்பிட்ட தட்டை கூட எடுக்கவில்லை என்றால் அல்லது சாப்பிட உட்காரும் முன் தேவையான பொருட்களை எடுத்து வந்து சாப்பிடும் இடத்தில் வைக்க உதவவில்லை என்றால் அது அவரது பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. சுருக்கமாக சொன்னால் சிறு விஷயங்களாக இருந்தாலும் கூட நீங்கள் அவருக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் கணவர் பொறுப்பற்றவர் என்பதில் சந்தேகம் இல்லை.
நம்பகத்தன்மை இல்லாத ஒரு பார்ட்னரை கொண்டிருப்பது மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் மோசமான விஷயமாகும். உங்கள் கணவர் பல விஷயங்களில் வாக்குறுதிகளை அளித்து கொண்டே இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவற்றை கடைப்பிடிக்க தவறுகிறார் என்றால் நீங்கள் ஒரு பொறுப்பற்ற நபரை திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
திருமணமானவுடன் முன்பை விட அதிக பணத்தை சேமிப்பதும், தேவையில்லாத விஷயங்களுக்குச் செலவு செய்வதை குறைத்து கொள்வதும் முக்கியம். குடும்பத்தை நடத்த, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்குத் தேவைப்படும் நிதியில் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களது கணவருக்கும் பங்களிப்பு இருக்க வேண்டும். ஆனால் உங்கள் கணவர் ஷாப்பிங் அல்லது வேறு தேவையற்ற விஷயங்களுக்கு செலவு அதிகம் செய்வதும், சேமிக்கும் பழக்கம் இல்லாமல் இருப்பதும் அவர் பொறுப்பற்ற நபர் என்பதை வெளிப்படுத்துகிறது.