ஒரு ஆணும், பெண்ணும் காதல் என்ற பந்தத்தில் இணைவதற்கு முன்பாக ஒன்றிரண்டு முறை நேரில் சந்தித்துப் பேசி, கருத்துகளையும், எண்ணங்களையும் பரிமாறி ஒருவரை, ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பாகத் தான் டேட்டிங் அமைகிறது. குறிப்பாக, முதல் சந்திப்பு என்பது நம் மனதை முழுவதுமாக கவரக் கூடிய வகையிலும், நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் அமைய வேண்டும்.ஆனால், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல சிலருக்கு முதல்முறை டேட்டிங் சந்திப்பு என்பது சொதப்பலாக அமைந்துவிடுகிறது.
குறிப்பாக தாமதமாக வந்து சேருவது, வாய் நிறைய உணவை அடைத்து வைத்துக் கொண்டு பேசுவது, கடந்த கால வரலாறுகள் குறித்து மணிக்கணக்காக கதை பேசுவது என பல விஷயங்கள் ஒரு டேட்டிங் சந்திப்பை தோல்விக்குரியதாக மாற்றி விடுகிறது. இத்தகைய நிலையில், முதல்முறை நடைபெறும் டேட்டிங் சந்திப்பின்போது நாம் கவனித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
தாமதமின்றி வந்து சேருவது : எதிர்பாராத போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்கிங் கிடைக்காத சூழல் போன்ற பல காரணங்களால் ஒருசில நிமிடங்கள் தாமதமாகுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அதிக நேரம் தாமதமாக வருவதும், அதுகுறித்து விளக்கம் கூறாமல், வருத்தம் தெரிவிக்காமல் இருப்பதும் சரியல்ல.
பணியாளர்களை அவமதிப்பது : நீங்கள் ஒரு ரெஸ்டாரண்ட் அல்லது ஹோட்டலில் முதல்முறை சந்திக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பர் அல்லது தோழி என்பவர், அங்குள்ள பணியாளர்களுக்கு மதிப்பு கொடுப்பவராக இருக்க வேண்டும். அவர்களை நீ, வா, போ என பேசுவது அல்லது ஒரு கட்டளையிடும் தோரணையில் பேசுவது என்பதெல்லாம் ஏற்க முடியாத குணம் ஆகும்.