எஸ்டிஐ எனப்படும் பாலியல் ரீதியில் பரவக் கூடிய நோய்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. பாலியல் ரீதியிலான நோயால் பாதிக்கப்பட்ட நபருடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ளும்போது, அந்த நோய் உங்களுக்கும் பரவக் கூடிய வாய்ப்புகள் மிக, மிக அதிகம். ஆனால், நீங்களோ அல்லது உங்கள் பார்ட்னரோ கன்னித்தன்மை உடையவராக இருந்தும் கூட பாலியல் ரீதியிலான நோய்கள் பரவ வாய்ப்பு உண்டா?
முதலில் கன்னித்தன்மை என்றால் என்ன? இந்த சொல்லுக்கான அர்த்தம் ஒவ்வொரு நபரின் கண்ணோட்டத்தை பொறுத்து வேறுபடுகிறது. ஆனால், பொதுவாக ஒருமுறை கூட உடலுறவு வைத்துக் கொள்ளாத நபர்களைத்தான் கன்னித்தன்மை கொண்டவர்கள் என்று குறிப்பிடுகிறோம். சிலர் பெண்ணுறுப்பு அல்லது ஆசனவாய் வழியே உறவு கொள்ளாமல் இருப்பதையே கன்னித்தன்மை எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால், உண்மையை சொல்வதென்றால் பிறப்புறுப்பு வழி, ஆசனவாய் வழி அல்லது வாய்வழி என எந்த வகையிலும் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பது தான் கன்னித்தன்மை ஆகும்.
உடலுறவு மற்றும் பாலியல் நோய் அச்சுறுத்தல்: இரு நபர்கள் உடல் ரீதியாக, அவர்களின் சருமங்களுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும் பாதுகாப்பற்ற உடலுறவில் இது மிக, மிக அதிகம். குறிப்பாக பிறப்புறுப்பு வழி மேற்கொள்ளப்படும் பாலியல் நடவடிக்கை தான் நோய் பரவுவதற்கான அபாயங்களில் முதன்மையானதாக இருக்கிறது. மெல்லிய அமைப்பை கொண்ட ஆசனவாய் பகுதியானது உடலுறவின்போது சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என்றும், அதன் மூலமாக தொற்றுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
பொதுவான பாலியல் நோய்கள் : டிரைக்கோமோனாஸ், கிளாமீடியா, கோனோரீயா, சிப்லிஸ் ஆகியவை மிகவும் பொதுவான மற்றும் குணப்படுத்த தகுந்த பாலியல் நோய்கள் ஆகும். அதே சமயம் ஹெச்ஐவி, ஹெபிடிடீஸ் பி தொற்று, மனித டி-லிம்போடிரோபிக் வைரஸ் போன்றவை குணப்படுத்த முடியாத அபாயகரமான நோய்கள் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
மற்ற தொடர்புகளிலும் பரவலாம் : பிறப்புறுப்பு வழி பாலியல் நடவடிக்கை மூலமாக மட்டுமே நோய்கள் பரவும் என்று அர்த்தம் அல்ல. பிற வகையிலும் பரவக் கூடும். குறிப்பாக வாய்வழி பாலியல் நடவடிக்கைகளில் கூட பரவலாம். சாதாரணமாக நோய் பாதிப்பு கொண்ட ஒருவருக்கு நீங்கள் முத்தம் கொடுக்கும்போது, கிருமிகள் உங்கள் எச்சிலில் ஒட்டிக் கொள்ளக் கூடும்.
பாதுகாப்பது எப்படி? பாலியல் ரீதியிலான தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. இது 100 சதவீதம் பாதுகாப்பு தரும் என்று உத்தரவாதம் தர முடியாது என்றாலும் கூட வாய்ப்புகள் குறையும் என்று சொல்லலாம். பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் வழி உறவுகளின்போது ஆணுறை பயன்படுத்துவதன் மூலமாகவும், வாய்வழி புணர்ச்சியின்போது ஈறுகளுக்கான பாதுகாப்பு கவசம் அணிவதன் மூலமாகவும் நோய்களை தடுக்க முடியும்.