காதல் தோல்வி என்பது ஒருவரை கண்டிப்பாக வெகுவாக பாதிக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு வித சோதனைகளை கடந்து தான் ஒருவர் இந்த காதல் தோல்வி என்ற விஷயத்தை முழுவதும் கடக்க முடியும். இந்த சமயங்களில் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொண்டு மிகவும் தனிமையாக உணர்வீர்கள். மற்றவர்களுடன் உணர்வு ரீதியாக இணைந்து இருப்பதும் காதல் வயப்படுவதும் மனிதர்களின் இயல்புதான்.
ஆனால் சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை போல அனைத்தும் அமைந்து விடுவதில்லை. சில நேரங்களில் உங்களது முன்னாள் காதலரோ அல்லது காதலியோ உங்களை அணுகி மன்னிப்பு கூறும் பட்சத்தில் நீங்கள் மீண்டும் அவர்களுடன் இணைந்து வாழ ஒரு வாய்ப்பு கொடுப்பதற்கு யோசிக்கும் சூழ்நிலை உண்டாகலாம். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் முதலில் எந்த காரணத்தினால் நீங்கள் உறவை முறித்துக் கொண்டீர்கள் என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது நல்லது. அதன் பிறகும் காதலருக்கு ஒரு வாய்ப்பு வழங்க எண்ணினால் தாராளமாக செய்யலாம். ஆனால் நீங்கள் மீண்டும் உங்களது பழைய காதலருடன் உறவை தொடர வேண்டாம் என்பதற்கான சில காரணங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
கட்டுபடுத்துதல் : உங்களது பார்ட்னர் உங்களை முழுதும் கட்டுப்படுத்த விரும்பினாலோ அல்லது உங்களது முடிவுகளை அவர் எடுக்கும் குணமுடையவராக இருந்தாலோ கண்டிப்பாக மீண்டும் நீங்கள் உங்களது உறவை புதுப்பித்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. காதலில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் சகிப்புத்தன்மையுடனும் இருந்தால்தான் அந்த உறவு நீடித்து நிற்கும். ஒருவரது முடிவுகளில் மற்றொருவர் தலையிடுவதும் அவர் வாழ்க்கை முடிவுகளை எடுப்பதும் கூடாது.
குறை கூறுபவர்: உங்களது பார்ட்னர் கடுமையாவராக இருந்தால் கண்டிப்பாக அவரிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. இந்தக் கடுமை என்பது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உணர்வு ரீதியாக காயப்படுத்துவதற்கும் பொருந்தும். தன்னுடைய தவறுக்காக மற்றொருவரை குறை கூறும் ஒருவருடன் சேர்ந்து வாழ்வது முடியாது. மற்றொருவரை குறை கூறுவது என்பது எந்த ஒரு சூழ்நிலைக்கும் பொருந்தாத ஒன்று. எனவே இவரிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது.
மதிப்பளித்தல் : உங்களுக்கு மதிப்பளிக்க கூடியவராக இருக்கிறாரா என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தனிப்பட்ட ரீதியாக இல்லாமல், உங்களையும் நீங்கள் செய்யும் தொழில் என அனைத்தையும் மதிக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். ஒரு உறவு நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் எனில் இருவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். உங்களது சாதனைகளை அவ்வப்போது கொச்சைப்படுத்துவதும், உங்களது சோதனை காலங்களின் போது குறை கூறுபவர்களாகவும் இருந்தால் நீங்கள் அவர்களுடன் காதலை முறித்துக் கொண்டது மிக சரியான அணுகு முறை ஆகும்
நம்பிக்கை : உறவில் இருவருக்கும் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். உங்களது கடந்த கால வாழ்க்கையில் உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனால் உங்களது உறவின் விரிசல் ஏற்பட்டிருந்தால் உங்களது உறவை மீண்டும் புதுப்பிப்பதை பற்றி ஒரு முறை யோசிப்பது நல்லது. ஏனெனில் உறவில் சந்தேகம் என்பது ஏற்பட்டு விட்டாலே அதன் பிறகு அந்த உறவானது மகிழ்ச்சிகரமான ஒரு உறவாக இருப்பது என்பதே சந்தேகம் தான்.
தவறுகளை ஏற்று கொள்ளுதல் : தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளாத ஒருவராக உங்களது பார்ட்னர் இருந்தால் அவருடன் உறவே புதுப்பித்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஏற்கனவே ஏற்பட்ட காதல் முறிவுகளுக்கும் தங்களது தவறுகளுக்கும் மற்றவரை குறை கூறும் ஒருவருடன் கட்டாயம் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ இயலாது. மேலும் உங்களுடன் சேர்ந்து வாழ உங்களது பார்ட்னர் எந்தவித முயற்சியும் செய்யவில்லை எனில் முடிந்த அளவு அவரை தவிர்த்து விடுவதே நல்லது.