இந்திய கலாச்சாரத்தில் திருமணங்கள் எப்போதுமே புனிதம் மிகுந்ததாக கருதப்படுகின்றன. அதே சமயம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்றால் என்ன என்பது குறித்து பெரிய அளவுக்கு வரையறைகள் எதுவும் இல்லை. இந்த சூழ்நிலையில் பல்வேறு விதமான குழப்பங்கள் மற்றும் தீர்வில்லாத பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக திருமணம் கடந்த உறவு என்பதும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.
இன்றைய சூழலில் திருமணம் கடந்த உறவுகள் அதிகரிக்க காரணம் என்பது குறித்து, ஆன்லைன் டேட்டிங் நிறுவனமான கிளீடன் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் திருமணமான இளம் வயதினரிடம், திருமணம் கடந்த உறவு குறித்த சிந்தனை எதனால் தோன்றுகிறது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பயனாளர்கள் அளித்த பதில்களில் இருந்து பின்வரும் காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மற்றொரு நபர் மீதான உடல் ஈர்ப்பு : திருமணம் கடந்த உறவுக்கு பரவலான காரணம் இதுதான். பெரும்பலான நபர்களுக்கு தங்கள் பார்ட்னரின் மீதான ஈர்ப்பு குறைந்து, வேறொருவர் மீதான உடல் ஈர்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக, தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் கொண்டாட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்கும்போது பிறர் மீது ஈர்ப்பு ஏற்படுவதாக 26 சதவீதம் பேர் கூறியுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக ஈர்ப்பு ஏற்படுவதாக 25 சதவீதம் பேரும், டேட்டிங் ஆப் மூலமாக ஈர்ப்பு ஏற்படுகிறது என்று 19 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.
பார்ட்னரின் அக்கறையின்மை : திருமண வாழ்க்கையில் தங்கள் கணவனோ அல்லது மனைவியோ தன் மீது அக்கறை செலுத்துவதில்லை என்று ஒருவர் உணருகின்றபோது, திருமணம் கடந்த உறவுக்கு அது அடிப்படையாக அமைகிறது. குறிப்பாக, பார்ட்னரிடம் இருந்து உளவியல் ரீதியிலான ஆதரவு கிடைக்காதவர்களும், பார்ட்னர் நம்பிக்கையற்றவராக உள்ளார் என்று நினைக்கின்றபோதும் திருமணம் கடந்த உறவை நாடுகின்றனராம்.
உணர்வுகள் : சிலர் தங்கள் திருமண வாழ்க்கை திருப்தியாக உள்ள போதிலும், இன்னொரு நபரிடம் இருந்து கிடைக்கும் மன ஆறுதலுக்காக தன்னை பறிகொடுக்கின்றனர். அதாவது, ஒரே சமயத்தில் இருவரை நேசிப்பது சாத்தியம் என்று 57 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர். திருமணம் நடந்த ஓராண்டுக்கு உள்ளாகவே ஏமாற்றும் நடவடிக்கை தொடங்கி விடுகிறது என்று 45 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர்.
புதிய ரொமான்ஸ் விருப்பம் : ஒரு தார மண வாழ்க்கையில் போதுமான இன்பம் கிடைக்காது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. இதனால் வேறொரு நபருடன் பந்தம் ஏற்படுத்திக் கொள்வதை இயற்கையானது, நியாயமானது என்று கருதுகின்றனர். சுருக்கமாக சொன்னால், புத்தம்புது நபருடன் புதிய கோணத்தில் ரொமான்ஸ் முயற்சிகளை நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர்.
தாம்பத்ய உறவில் திருப்தியின்மை : ஆம், இதுதான் திருமணம் கடந்த உறவுக்கு பிரதான காரணமாக உள்ளது. பாலியல் உறவு வைத்துக் கொண்டாலும் கூட அதில் முழுமையான திருப்தி கிடைக்கவில்லை என்று 41 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர். அதே சமயம், திருமணம் கடந்த உறவின் மூலமாக திருப்தி கிடைப்பதாக 55 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர். எப்போதுமே பிறரின் மனதில் ஆசையை தூண்டக் கூடிய நபராக தாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம், வேறொருவருடன் உடல் ரீதியாக நெருங்க வேண்டும் என்ற விருப்பம் போன்றவையும் கூட திருமணம் கடந்த உறவுக்கு காரணமாக உள்ளன.