பிப்ரவரி 14 காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில், அதையொட்டி வெவ்வேறு கருப்பொருள்களை மையப்படுத்தி ஒவ்வொரு தினமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு சாக்லேட் டே, டெட்டி டே, கிஸ் டே, அரவணைப்பு தினம் என ஒரு வாரம் முழுவதுமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் காதலர்களுக்குள் தங்களுக்குள் வாக்குறுதிகளை பகிர்ந்து கொள்ளவும் பிரத்யேக நாள் அனுசரிக்கப்படுகிறது.
இன்பம், துன்பம் என வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் இணைந்திருப்பேன் என்பதுதான் பிரதான வாக்குறுதியாக ஒவ்வொருவரும் தங்கள் பார்ட்னரிடம் எதிர்பார்க்கின்றனர். இந்த ஒரு வாக்குறுதி நிறைவேறினாலே கருத்து வேறுபாடுகள், பிரிவுகள் அற்ற இன்பமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஏற்பட்டு விடும்.நாம் கொடுக்கும் வாக்குறுதி வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், அது மிகவும் மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அடையாள நோக்கத்தில் சிலர், வாக்குறுதியின்போது மோதிரம் மாற்றிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
எப்போது வாக்குறுதி கொடுக்கலாம் : பிப்ரவரி 14ஐ ஒட்டிய ஒரு வாரம் முழுவதுமே காதலர் தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், ஒரு சாரார் பிப்ரவரி 8ஆம் தேதியே வாக்குறுதி நாள் கொண்டாடிவிட்டனர். மற்றொரு சாரார் பிப்ரவரி 11ஆம் தேதி கொண்டாட காத்திருக்கின்றனர். துல்லியமாக இந்த நாள் என்றைக்கு கொண்டாடப்படுகிறது என்பதைக் காட்டிலும், உங்கள் பார்ட்னருக்கு எவ்வளவு தூரம் உண்மையான வாக்குறுதியை கொடுக்கப் போகிறீர்கள் என்பதே முக்கியமானது.
வாக்குறுதியின் முக்கியத்துவம் : வாக்குறுதி என்பது சட்டென்று வெளிப்படும் வார்த்தைகளை கொண்டதல்ல. அது நிலைத்து நிற்காது. ஒரு வாக்குறுதியின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து, அதை நம்மால் நிறைவேற்ற முடியுமா என்பதை ஆழ்ந்து யோசித்து, நீண்ட கலமாக மனதில் பரிசீலனை செய்து, அதற்குப் பிறகு அச்சு வார்த்தார்போல வெளிவருகின்ற வார்த்தைகள் தான் வாக்குறுதி ஆகும்.இந்த வாக்குறுதியின் பின்னால் உண்மை, நேர்மை, மன உறுதி, அன்பு எல்லாம் இணைந்திருக்கும். அப்படியுள்ள வாக்குறுதி தான் இருவருக்கும் இடையிலான பந்தங்களை வலுப்படுத்தும்.