புத்தாண்டு என்றாலே மக்கள் அனைவருக்கும் நியூ இயர் ரெசல்யூசன் (New Year Resolutions) தான் ஞாபகம் வரும். உடல் எடையை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது, வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது, புது கலையை தெரிந்து கொள்வது, பதவி உயர்வு பெறுவது என பல்வேறு ரெசல்யூசன்களை எடுப்பார்கள். கடந்த ஆண்டில் செய்ய முடியாததை புதிய ஆண்டு கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும் தனிநபர் தீர்மானங்களை எடுப்பர். அதுவே, நீங்கள் திருமண வாழ்க்கை வளம்பெற சில தீர்மானங்களை எடுக்கலாம். இதனால் தம்பதிகளின் உறவு மேலும் நெருக்கமடையும். அதன்படி இந்த ஆண்டு கீழ்காணும் ரெசல்யூசன்களை தம்பதிகள் (Couples) பின்பற்றலாம்.
ஒன்றாக இணைந்து நல்ல காரியங்களில் ஈடுபடுதல்: பொதுவாக திருமண நாள், பிறந்தநாள், தீபாவளி, புத்தாண்டு போன்ற சுப தினங்களில் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வர். நன்னாளில் உதவி செய்வதை போல கணவன், மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து ஆண்டு முழுவதும் உங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம் மனநிறைவு கிடைக்கும். அதேபோல, உங்கள் தாம்பத்திய வாழ்க்கை செழிக்கும்.
சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போடுவதை நிறுத்துதல்: கணவன், மனைவி உறவுக்கிடையே சண்டை என்பது எப்போதும் நடக்க கூடிய ஒரு விஷயம். சில சமயங்களில் ஒரு சிறு விஷயத்திற்கு ஆரம்பிக்கும் சண்டை மிகப்பெரியதாக வெடிக்கும். இது இருவரிடையே பிரிவை ஏற்படுத்தும். சிறிய விஷயத்திற்காக கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை விவாகரத்து வரை கூட சென்றுள்ளது. சண்டை என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் காலப்போக்கில், சிறிய பின்னடைவு கருத்துக்கள் உங்கள் உறவின் அடித்தளத்தை அழிக்கக்கூடும்.
எதிர்காலத்தைப் பற்றி விவாதித்தல்: எதிர்காலத்தைப் பற்றி கணவன் மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து விவாதிப்பது நல்லது. இதனை பல தம்பதியினர் பின்பற்றுவதில்லை. ஏனெனில் எதிர்காலத்தை பற்றி பேசும் சில சமயங்களில் இருவரிடையே சண்டை வர வாய்ப்பிருக்கும். ஆனால் எதிர்கால முடிவுகளை ஒன்றாக இணைந்து எடுப்பது தாம்பத்திய வாழ்க்கையை நிச்சயம் வலுப்படுத்தும்.
சிறு விஷயங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தல்: கணவன் மனைவி உறவில் எப்போதும் இருக்க வேண்டிய ஒரு விஷயம் பாராட்டுகளை பகிர்ந்து கொள்வது. உதாரணத்திற்கு உங்கள் மனைவி செய்யும் சமையல் நன்றாக இருந்தால் அதற்கு ஒரு சிறிய பாராட்டுகளை தெரிவிக்கலாம். அதேபோல கணவன் ஏதேனும் உதவிகளை செய்தால் அதனை கவனித்து அதற்கு பாராட்டு தெரிவிக்கலாம்.