அன்னையர் தினம் கூடிய விரைவில் வர உள்ளது. இந்த சமயத்தில் ஒரு வேலை நீங்கள் உங்கள் அம்மாவுடன் ஏதாவது சண்டை போட்டு கொண்டு பேசாமல் இருந்தாலோ அல்லது உங்கள் அம்மாவுடனான உறவை பலப்படுத்த நினைத்தாலோ அதனை சரி செய்து கொள்ள இதுவே சிறந்த நேரம். உங்கள் அம்மாவுடனான உறவை பலப்படுத்திக் கொள்ள உதவும் ஒரு சில டிப்ஸ் உங்களுக்காக இதோ:-
அம்மாவுடன் மனம்விட்டு பேசுங்கள்: நல்ல உறவுக்கு மனம் விட்டு பேசுவது எப்பொழுதும் அவசியம். ஆகவே உங்கள் அம்மாவுடன் பேசுவதற்கான நேரத்தை முதலில் ஒதுக்குங்கள். நீங்கள் உங்கள் அம்மாவை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு போன் மூலமாக நீங்கள் தொடர்பு கொண்டு பேசலாம். நீங்கள் இருவரும் சேர்ந்து செலவழித்த சந்தோஷமான நினைவுகளை பற்றி பேசுவதன் மூலம் நீங்கள் தொடங்கலாம்.
உங்கள் அம்மாவிடம் பேசும் பொழுது, அவர் வளர்ந்த விதம் குறித்தும் நீங்கள் கேட்கலாம். இது உங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒன்றாகவும் அமைய வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு தங்களது கடந்த காலத்தைப் பற்றி பேசுவதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக அது ஒரு மோசமான நினைவாக இருந்தால். எனினும் நீங்கள் அது பற்றி தெரிந்து கொள்ள நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் அம்மாவுக்கு தெரியப்படுத்துங்கள்.
உங்கள் தாயின் நோக்கத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்: அவர் உங்களின் கருத்தை புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட, நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பொதுவாக நாம் பிறரிடம் பேசும் பொழுது அவர் என்ன பேசுகிறார் என்பதை காதில் வாங்கிக் கொள்ளாமல், அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே இருப்போம். இது முற்றிலுமாக தவறு.
முதலில் உங்கள் அம்மா பேசும் பொழுது அவர் என்ன பேசுகிறார் என்பதை முழுவதுமாக கவனியுங்கள். அவர் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர் பக்கத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறர் பேசுவதை கூர்ந்து கவனிப்பது அவரை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
எதார்த்தமான எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்: ஒரு சிலருக்கு அம்மா- பிள்ளையுடனான உறவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அது நிஜத்தில் சாத்தியம் இருக்காது. ஆகவே இது போன்ற கற்பனைகளை வளர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடப்பது வீண் வாக்குவாதங்கள் மற்றும் மனக்கசப்புகளை தவிர்க்க உதவும்.
உங்கள் அம்மவை பிறருடன் ஒப்பிட வேண்டாம் : உங்கள் அம்மாவை யாருடனும் ஒப்பிடாதீர்கள் டிவியில் பார்க்கும் நபர்கள், உங்கள் நண்பர்கள் அல்லது வேறு எவருடனும் உங்கள் தாயை ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்து விடுங்கள். என் நண்பரின் அம்மா இப்படி இருப்பார் அப்படி இருப்பார் என்ற பேச்சை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். ஒவ்வொரு தாய் மற்றும் பிள்ளை இருவருக்கான உறவும் தனித்துவமானது. ஆகவே இது போன்ற பேச்சுகளை விட்டுவிட்டு உங்கள் தாயுடனான உறவை எப்படி மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துங்கள்.
உடைந்த எல்லா உறவுகளையும் சரிசெய்து விட முடியாது: உடைந்து போன எல்லா உறவுகளையும் உடனடியாக ஒட்ட வைத்து விட முடியும் என்று நினைத்து விட வேண்டாம் ஒரு சில உறவுகளை முதல் முயற்சியிலேயே சரி செய்துவிடலாம். ஒரு சிலவற்றிற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். உடைந்து போன உறவுகளில் சம்மந்தப்பட்ட இருவருக்குமே இந்த உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே அந்த உறவை சரி செய்ய முடியும். ஒருவர் மட்டும் அனைத்து பழிகளையும் ஏற்றுக் கொண்டு இருக்கும் பொழுது அது ஒரு நல்ல உறவாக அமையாது.