பேச்சில் கனிவு காட்ட மாட்டார்கள். கொஞ்சம் மிரட்டலும், உருட்டலுமாகத் தான் இருக்கும். சில சமயம் வேண்டுமென்றே நம் மனம் நோகும்படி தடித்த வார்த்தையால் பேசுவார்கள். சில சமயம், அவர்களை அறியாமலேயே அவர்கள் கூறுகின்ற வார்த்தை பிறரை காயப்படுத்தி விடும். ஆக, உயர் அதிகாரிகள் எப்படியெல்லாம் பேசுவார்கள், அதன் அர்த்தம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
நான் செய்வதை நம்பு : உங்கள் கருத்து அல்லது விருப்பம் என்னவென்று ஊழியர்களிடம் உயர் அதிகாரி கேட்கவே மாட்டார். தன் மனம் விரும்பியதை மட்டுமே செய்வார். அதிலும், நான் சொல்கின்றபடி செய்யுங்கள், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறுவார்கள். நமக்கு கட்டளையிடுவது தான் உயர் அதிகாரியின் பணி என்றாலும், இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஊழியர்களின் புத்தாக்க சிந்தனைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
அதை நானே பார்த்துக் கொள்கிறேன் : வேலை என்று வந்து விட்டால் அதில் சவால்கள் இல்லாமல் போகுமா? ஆக, சவால்களை எதிர்கொள்ளும்போது கொஞ்சம் தாமதம் ஆகத் தானே செய்யும். ஆனால், உயர் அதிகாரிக்கு இந்த விஷயத்தில் பொறுமை இருக்காது. இன்னுமா காரியம் நடக்கவில்லை. அதை கொடுங்கள், நானே அந்த வேலையை முடிக்கிறேன் என்று கடிந்து கொள்வார்.
நீங்கள் தோல்வி அடைய மாட்டீர்கள் : ஒரு உயர் அதிகாரியாக அலுவலக ஊழியர்களை ஊக்கப்படுத்துவது அவர்களுடைய கடமை தான். ஆனால், நேரம், நம்முடைய பணித் திறன் போன்ற எதையும் கணக்கிடாமல், செய்து முடிக்க கடினமான பொறுப்பை நம் தலையில் தூக்கி வைத்து, உன்னால் முடியும் செய் என்று சொல்வார்கள். நாம் அல்ல, யாராலும் அந்த கெடுவுக்குள் முடிக்க முடியாது என்று தெரிந்த விஷயமாக இருக்கும். ஆனால், முடிந்தவரை லாபம் என்று நினைப்பார்கள்.
உன்னால் மட்டும் தான் முடியும் : ஒவ்வொரு ஊழியருக்கு பணி வரைமுறைகள் இருக்க வேண்டும். நாம் கொஞ்சம் ஆர்வத்துடன் வேலை செய்கிறோம் என்பதற்காக அனைத்து வேலைகளையும் உயர் அதிகாரிகள் நம் மீதே சுமத்துவார்கள். உன்னால் மட்டும் தான் இதை செய்ய முடியும் என்று நம்பிக்கை வேறு கொடுப்பார்கள். என்ன இருந்தாலும் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா!
பழைய தவறுகளை நினைவுகூர்வது : எந்தவொரு வேலையும் 100 சதவீதம் தவறின்றி அமையாது. தவறுகளை திருத்துவது தான் உயர் அதிகாரியின் பணி. ஆனால், சம்பந்தமே இல்லாமல் ஒவ்வொரு முறையும் நம்முடைய பணியை மதிப்பீடு செய்யும்போது, பழைய தவறுகளை சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கம் உயர் அதிகாரிகளுக்கு உண்டு. இது நம்மை அவமரியாதை செய்வதாகும்.