திருமண பந்தம் என்றாலும், காதல் என்றாலும் ஆண், பெண் இருவருமே ஒருவருக்கு, ஒருவர் உண்மையாக அன்பு செலுத்தினால் மட்டுமே அந்த உறவு பலம் கொண்டதாக அதிக நாட்களுக்கு நீடிக்கும். இதில், யாரேனும் ஒருவர் தவறு செய்தாலும் கூட, இந்த உறவில் கசப்புத்தன்மை மேலோங்கி விடும். பெரும்பாலும் அழகான, அன்பான வாழ்க்கை துணை கிடைத்தாலும் கூட, ஒரு சில ஆண்கள் சில பெண்களின் மீது கண் வைப்பதும், வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் வழிந்து பேசுவதும் அதிகரித்து வருகிறது. உங்களுக்கு கிடைக்கப் பெற்ற கணவர் அல்லது காதலர் ஏமாற்றும் நபர் என்றால், நிச்சயமாக அது உங்கள் மனதை பாதிக்கக் கூடிய விஷயம் தான். இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு, உங்கள் கணவர் அல்லது காதலரை நல்வழிப்படுத்த கீழ்காணும் டிப்ஸ்களை நீங்கள் முயற்சி செய்யலாம்.
உங்கள் கணவர் வழிந்து பேசுவதற்கு காரணம் என்ன? உங்கள் கணவர் அல்லது காதலர் உங்களுக்கு உண்மையாக இல்லை என்பதையும், அவர் வேறு சில பெண்களிடமும் நெருங்கிப் பழகி வருகிறார் என்பதை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது உடனடியாக அதிரடி ஆக்ஷனில் இறங்கி விடக் கூடாது. முதலில் அவர் இப்படி நடந்து கொள்ள என்ன காரணம் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அவர் மீது நீங்கள் அக்கறை செலுத்தி, தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சினைகள் இருக்கலாம். அவர் மனம் வெறுத்துப் போனவராக அல்லது கோபம் கொண்டவராக இருக்கலாம். அதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு நீங்கள் தீர்வு காண வேண்டும்.
உங்கள் காயத்தை வெளிப்படுத்துங்கள் : கணவர் அல்லது காதலர் உங்களை ஏமாற்றும் போது, அது எந்த அளவுக்கு உங்கள் மனதை பாதித்துள்ளது அல்லது உங்கள் மனதை புண்படுத்தியுள்ளது என்பதை அவருக்கு புரிய வையுங்கள். அதேசமயம், இதுகுறித்துப் பேசும்போது அன்பாகவும், ஆறுதலாகவும் சொல்ல முற்பட வேண்டும். கோபத்தோடு பேசுவதால் இருதரப்பிலும் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உங்கள் வழிக்கு கொண்டு வாருங்கள் : பிறரிடம் வழிந்து பேசுவது என்பது அவர் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். அந்த எண்ணத்தை மாற்றியமைத்து, நீங்களே உங்கள் கணவர் அல்லது காதலனிடம் குலைந்து பேசலாம். உங்களைத் தவிர வேறொருவரை மனதில் நினைத்துப் பார்க்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்து விடக் கூடாது. உங்கள் பந்தம் தொடங்கிய நாட்களில் இருந்த அதே புத்துணர்ச்சியை மீட்டு கொண்டு வாருங்கள்.