

உங்களை நினைத்து அவமானமாகவும், குற்ற உனர்ச்சியுடனும் நீங்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அதைவிட மிகப்பெரிய மனச்சோர்வு வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படி இருந்தால் எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் உயிரற்ற உடல் போல் சுற்றிக்கொண்டிருப்போம். இதற்கு ஒரே தீர்வு இதிலிருந்து மீண்டு வருவதுதான்.


நீங்கள் என்ன தவறு செய்திருந்தாலும் அதற்கு காரணம் நீங்கள் மட்டும்தான் எனில், அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். செய்துவிட்டேனே என வருத்தப்படாமல்...ஆமாம் செய்துவிட்டேன் என்ன செய்வது என அதை சரிசெய்ய திட்டமிடுங்கள்.


அந்த நேரத்தில், அந்த நொடியில் அப்படி செய்ய என்ன காரணம், ஏன் செய்தீர்கள் என்பதை சிந்தியுங்கள். உங்கள் பக்கம் இருக்கும் நியாயம் என்ன என்பதை ஆராயுங்கள். அதை புரிந்துகொண்டாலே குற்ற உணர்ச்சியிலிருந்து பாதி வெளியேறி விடலாம்.


குற்ற உணர்ச்சியால் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். உறவினர் , நண்பர்களுடனான நெருக்கத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாமல் அதிலிருந்து வெளியே வாருங்கள். எதையும் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.


உங்களுக்கு நீங்களே சமாதானம் செய்துகொண்டு மன்னிப்பு அளித்துக்கொண்டால் மட்டுமே இதிலிருந்து வெளியேற முடியும். இல்லையெனில் உங்கள் மனம் கேள்விகளால் துளைத்துக்கொண்டே இருக்கும்.


தவறை புரிந்துகொண்டதும் இனி அப்படியான தவறை ஒருபோதும் செய்யக் கூடாது என்பதில் தீர்மானமாக இருங்கள். அதேபோல் இதுவரை கடந்து வந்த அனுபவங்களிலிருந்தும் இனி வரும் எதிர்காலத்தை கவனமாகக் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.


உங்கள் குற்ற உணர்ச்சிக்கு , உங்கள் தவறுக்கு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கோருங்கள். இதனால் மனதளவில் சற்று ஆறுதல் கிடைக்கும். அப்போதுதான் நீங்கள் அந்த தவறை முழுமையாக ஏற்றுக்கொண்டீர்கள் என மனம் நம்பும். உங்கள் போக்கிற்கு மனம் வரும்.