வீட்டு வேலைகளை செய்வது தங்களுக்கு மிகவும் பிடித்த செயல்களில் ஒன்றாக இருப்பது என்பதை பெரும்பாலான மக்கள் ஒப்பு கொள்வார்கள். ஏனென்றால் சில நேரங்களில் டென்ஷனை குறைத்து கவனத்தை திசை திருப்ப உதவும். வசிக்கும் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள விரும்பும் சிலருக்கு வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்வது பழக்கமான ஒன்றாக இருக்கும்.
ஆனால் சில நேரங்களில் கணவன்- மனைவி இருவருமாக இருக்கும் வீட்டில் பார்ட்னருடன் மனக்கசப்பு எழ செய்து விடும் விவகாரமாக மாறி விடுகின்றன வீட்டு வேலைகள். வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி ஒருவர் தனது பார்ட்னரிடம் கேட்பது எப்போதுமே எளிதான காரியமல்ல. அப்படி கேட்டால் பெரும்பாலான நேரங்களில் சண்டைகள் வருவது தான் மிச்சமாக இருக்கும். இதற்கு ஈகோ ஒரு முக்கிய காரணமாகிவிடுகிறது.
இந்த வீட்டு வேலை எல்லாம் என்னால் செய்ய முடியாது என்று பாலினத்தை காரணம் காட்டி கணவரோ, எல்லா வேலையையும் நானே தான் இழுத்து போட்டு கொண்டு செய்ய வேண்டுமா என்ன என்று மனைவியோ தங்கள் பார்ட்னர் மீது கோபம் கொள்ளும் போது அதுவே பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது. திருமண வாழ்க்கை என்பது நிச்சயம் பேச்சுலர் பழக்க வழக்கங்களை தொடர கூடிய தருணம் அல்ல. ஏனென்றால் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து குடும்பத்தை வழிநடத்த வேண்டிய புதிய பொறுப்பு தானாகவே உருவாகிவிடுகிறது.
இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் உங்கள் பார்ட்னர் எந்த ஒரு வீட்டு வேலைகளிலும் உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது நிச்சயம் உங்களை எரிச்சலடைய செய்யும். இந்த நிலையை நீங்கள் மாற்ற விரும்பினால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வீட்டு வேலைகளை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வதற்கான சில வழிகள் இங்கே.
ஆர்வமுள்ள வேலைகள் : எப்போதுமே அவரவர் ஆர்வத்திற்கு ஏற்ப வீட்டு வேலைகளை ஷேர் செய்து கொள்வது ஆரோக்கியமான உறவிற்கு அடித்தளமாக இருக்கும். ஒரு சிலருக்கு நல்ல மியூசிக் அல்லது பாட்டுகளை கேட்டு கொண்டே சில வேலைகளை செய்வது பிடிக்கும். உதாரணமாக மனதிற்கு பிடித்த மியூசிக்கை கேட்டு கொண்டே சிலர் துணிகளை மடித்து வைப்பார்கள். இது மாதிரியான எளிய வேலைகள் ஏதாவது செய்வதற்கு இருக்கிறதா என ஒரு கணவர் மனைவியிடம் கேட்டு அவற்றை செய்தால் அந்த வேலைகள் செய்வதற்கு எளிதாகவும், சுவாரஸ்யமாக இருக்கும்.
வீட்டு வேலைகளை சமமாக பிரிக்கலாமா? : உங்கள் பார்ட்னருடன் அமர்ந்து பேசி என்னென்னெ வேலைகளை அவரால் செய்து தர முடியும் என்று பட்டியலிடுங்கள். அதற்கேற்ப வேலைகளை பிரிக்கும் முன் அவர் அலுவலகத்திற்கு பயணம் செய்யும் நேரம், பணி நேரம் உள்ளிட்டவற்றை கட்டாயம் கணக்கில் கொள்ள வேண்டும். அதை பொறுத்து வீட்டு வேலைகளை சமமாக பிரிக்காமல் அவருக்கு சில வேலைகளை குறைத்து கொடுத்து விட்டு மற்றவர் சற்றே கூடுதல் பொறுப்புகளை எடுத்து கொள்ளலாம். குறிப்பாக பார்ட்னர் பணிசுமையால் அவதிப்படும் நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து கொடுத்தே ஆக வேண்டும் என கட்டாயபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கண்டு கொள்ள கூடாத விஷயங்கள் : உங்கள் பார்ட்னர் வீட்டு வேலையில் ஈடுபடும் போது சில நேரங்களில் சரியாக செய்யாவிட்டால் அவரை குறை கூற வேண்டாம். ஏனென்றால் எல்லோராலும் எப்போதும் எல்லா விஷயத்தையும் சரியாக செய்ய முடியாது. தவிர செய்த வீட்டு வேலையில் குறை கண்டுபிடிப்பது கண்டிப்பாக பார்ட்னரை காயப்படுத்தும் மற்றும் வெறுப்பை தரும். எனவே குறையை கண்டாலும் கூட நாசூக்காக சொல்லலாம் அல்லது கேட்காமல் நீங்களே அதை சரி செய்யும் முயற்சியை செய்யலாம்.
பணியாட்களை நியமிக்கலாம் : கணவன்- மனைவி என் இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருந்து வீட்டு வேலைகள் அதிகமாக இருந்தால், வீடு வேலைகளை செய்து முடிக்க வேலையாட்களை பணியமர்த்துவதே புத்திசாலித்தனம். வேலையாட்கள் சமயம் அதிகம் கேட்டாலும் கூட தம்பதியர் இடையேயான சண்டைகள், எரிச்சல் மற்றும் விவாதங்கள் என அனைத்திற்கும் நல்ல தீர்வாக இருக்கும்.