நண்பர்கள் என்றாலே எப்போதும் சந்தோஷம் நிறைந்த இடமாக மாறிவிடும். பொதுவாக நட்பில் அன்பும், அரவணைப்பும் அதிகம் இருக்கும். இது தான் நட்புக்கு மிக முக்கிய ஒன்றாக காலம் காலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில நண்பர்களுக்கு இடையில் இனம்புரியாத பிரச்சனைகள் அவ்வப்போது வரக்கூடும். இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது பொறாமை குணம். ஆனால் இதை பற்றி பலரும் கண்டு கொள்வதில்லை. இது மனித குணங்களில் ஒன்று தான், என்றாலும் இதனால் நட்புக்குள் வரக்கூடிய சிக்கல்கள் ஏராளம். எனவே இந்த பொறாமை குணத்தை உங்கள் நட்பில் வராமல் இருக்க சில வழிகளை பின்பற்றலாம். அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.
நட்பை ஏற்று கொள்ளுதல் : உங்கள் நட்புக்குள் அடிக்கடி இது போன்ற பொறாமை உணர்வு வருகிறது என்றால் அதை சரி செய்வதற்கான முதல் வழி அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வது தான். ஆம், இந்த வழிமுறை உங்கள் நட்பில் விரிசல் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். மேலும் இதை பின்பற்றுவதால் உங்களுக்கு எந்த வித அவமானமோ குற்ற உணர்ச்சியோ ஏற்பட போவதில்லை. ஒருவேளை உங்களுக்கு பொறாமை உணர்வு இருந்தால் உங்களை நீங்களே மோசமானவர் என்று மதிப்பிடாதீர்கள். அதை பக்குவமாக அணுக முயற்சி செய்யுங்கள்.
பெரிதுப்படுத்துதல் : உங்களது நட்பில் வரக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்வதற்கு பதிலாக அதை மேலும் மேலும் பெரிதாக்கி விடாதீர்கள். எனவே உங்களுக்குள் உள்ள பிரச்சனை என்னவென்று அறிந்து கொண்டு அதை தணிக்க பாருங்கள். மேலும் உங்களின் எதிர்மறை உணர்ச்சிகளை நியாயமானதாக கருத வேண்டாம். அதே போன்று உங்களை மற்றவர்களுடம் ஒப்பீடு செய்யாதீர்கள், இது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மையை தரக்கூடும். மேலும் உங்கள் நண்பரின் குறைபாடுகளை பெரிதாக பார்ப்பதை நிறுத்துங்கள்.
சிக்கல்கள் : உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் உள்ள பிரச்சனையை எழுத முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக இதற்கு தனியாக நேரம் ஒதுக்கி கவனிக்க வேண்டும். நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்கள் என்றால் அதையும் சேர்த்து குறிப்பிடுங்கள். மேலும் உங்கள் நண்பர் உங்களை மதிக்கவில்லை என்றாலோ அல்லது அவர் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றாலோ அதை சேர்த்து குறிப்பிடுங்கள். எனவே உங்களுக்கு உள்ள எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதலில் அதை கண்டுபிடித்து சரியாக கையாள முயற்சி செய்யுங்கள்.
உள்ளுணர்வுகள் : உங்களின் மனது சொல்வதை கேட்டு உங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்படாதீர்கள். சில சமயங்களில் மூளை சொல்லும் சரியான விஷயங்கள் கூட நமக்கு கடினமானதாக தோன்றுவதால், அதை செய்ய தவிர்க்கிறோம். எனவே உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்று கொள்ளுங்கள். உங்களின் பிரச்சனைகளை பகுத்தறிவுடன் கையாள பழகுங்கள். யார் தரப்பில் பிரச்சனை இருந்தாலும் அதை நிதானமாக சிந்தித்து முடிவெடுங்கள்.
வெளிப்படையாக பேசுங்கள் : உங்கள் நண்பருடன் உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கு சிறந்த வழி அவருடன் மனம்விட்டு பேசுவது தான். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசுவதே இந்த எல்லா பிரச்சனைகளுக்குமான சரியான தீர்வாக அமையும். முக்கியமாக நீங்கள் அவருடன் பேசும்போது உங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை மட்டுமே பேசிவிட்டு, அவரை பற்றி குற்றச்சாட்டாமல் இருங்கள். உங்கள் இருவருக்குமிடையில் உள்ள தவறான புரிதலில் சரிசெய்ய இது உதவும். அதே போன்று நீங்கள் அவரை எந்த அளவிற்கு நேசிக்கிறீர்கள் என்பதையும் உணர்த்த முயற்சி செய்யுங்கள்.