எல்லோரும் காதலிக்க துவங்கும் போது அல்லது திருமண வாழ்வில் நுழையும் போதும் அந்த உறவு என்றென்றும் நீடிக்கும் என்று நம்பிக்கையுடன் தான் புதிய வாழ்க்கையை துவங்குகிறார்கள். ஆனால் சில நேரங்களில் தவிர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள் காரணமாக உறவுகளை பிரேக்கப் செய்ய வேண்டிய சூழல் சிலருக்கு ஏற்படுகிறது. ஆரம்பத்தில், உற்சாகமாக இருக்கும் சில உறவுகள் நெருக்கமான உறவிற்கு முன்னேறினாலும், மற்ற சில ஜோடிகள் பிரிவை நோக்கி செல்கின்றனர்.
பிரிவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உணர்வுகள் பொருத்தமில்லாமல் இருப்பது, மதிப்பு அல்லது மரியாதை கிடைக்காத மற்றும் போலித்தனமான அக்கறை காட்டும் உறவுகளை பிரேக்கப் செய்து கொள்ளும் முடிவில் தான் பலர் பிரியும் முடிவை எடுக்கிறார்கள். பிரேக்கப்பின் மோசமான ஒரு பகுதியாக இருப்பது அதை செய்ய போகும் நபர், அவருடன் உறவில் இருக்கும் மற்றொரு நபருக்கு தனது முடிவு குறித்து தெரிவிப்பது. நீங்கள் உறவில் இருக்கும் நபரை பிரேக்கப் செய்ய முடிவெடுத்தாலும், அதை அவரிடம் எடுத்து சொல்வதற்கு சிறிது தயக்கம் இருக்கலாம்.
இத்தனை நாள் அன்பாக பழகிய ஒருவரிடம் எப்படி சட்டென்று முகத்தில் அடிப்பது போல உறவை முறித்து கொள்ளலாம் என்று கூறுவது என்ற யோசனை உங்களை தடுக்கலாம். உங்களுக்கு சுத்தமாக செட் ஆகாத ஒருவருடன் வாழ்க்கையை ஓட்டுவதை விட அவரை விட்டு பிரிவது அவருக்கும் கூட நல்லது. உங்களது உறவை ஒரு நல்ல மற்றும் அன்பான முறையில் பிரேக்கப் செய்வது சிறப்பான முடிவாக இருக்கும். மேலும் இப்படி செய்வது எதிர்பாலினத்தவரை பெரிதாக காயப்படுத்தாமல் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். எனவே நீங்கள் உங்கள் பார்ட்னரை பிரிய முடிவெடுத்திருந்தால், அவருடனான உறவை நல்ல முறையில் பிரேக்கப் செய்வதற்கான சில வழிகளை பார்க்கலாம்.
சரியான வார்த்தைகளில் கவனம் : உங்கள் பார்ட்னரிடம் உறவை பிரேக்கப் செய்வது குறித்து பேசும் போது அவரிடம் நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது. பார்ட்னரின் வாயிலிருந்து மோசமான சொற்கள் ஏதும் வந்துவிடாதபடி சரியான வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை கவனமாக தேர்வு செய்து பேச வேண்டும். அப்போது தான் வாழ்க்கையின் எதார்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கை, உங்கள் முடிவு என்பதையும் அவர்கள் ஏற்று கொள்ள முயற்சி செய்வார்கள். உங்கள் பிரேக்கப் முடிவால் ஒருவேளை பார்ட்னர் கோபமடைந்து உங்களை வார்தைகளால் அவர்கள் எவ்வளவு காயப்படுத்தினாலும் பதிலுக்கு நீங்கள் அவரை திட்டவோ அல்லது அவதூறான வார்த்தைகளை பேசவோ செய்யாமல் அமைதியாக இருங்கள்.
சரியான காரணத்தை கூறவும் : உங்கள் பார்ட்னரை நீங்கள் ஏன் பிரிய முடிவெடுத்தீர்கள் என்பதற்கான சரியான காரணத்தை ஒளிவு மறைவின்றி அவரிடம் எடுத்து கூறுவது தான் ஒரு சரியான பிரேக்கப்பிற்கு உதாரணமாக இருக்க முடியும். உங்கள் பார்ட்னரை சந்தித்து பேசும் போது இந்த உறவை நீடிப்பது எதனால் ஒத்து வராது என்பதற்கான உறுதியான காரணத்தை அவரிடம் எடுத்து கூறுங்கள். அவருடன் ஏன் உறவை தொடர முடியாது என்பதை உங்கள் பார்ட்னர் புரிந்து கொள்ள இது உதவும். இதனால் வீண் விவாதங்கள் தவிர்க்கப்படும்.
பழி சொல்ல வேண்டாம் : உங்கள் பார்ட்னர் உங்களை கோபப்படுத்த ஏதாவது செய்திருந்தாலும் கூட, பிரேக்கப் சமயத்தில் அதை காரணம் காட்டி அவர்களை குற்றம் சொல்வது அல்லது பழி போடுவதை தவிர்க்க பாருங்கள். ஏனென்றால் நீங்கள் அவரை விட்டு பிரிவது அவருக்கு மனதளவில் கடும் வேதனையை ஏற்படுத்த கூடும். அந்த நேரத்தில் உங்கள் பிரேக்கப் முடிவோடு, பழியையும் சுமத்துவது அவரை கடுமையாக பாதிக்கலாம்.
முதலில் பார்ட்னரிடமே சொல்லுங்கள் : பிரேக்கப் முடிவை முதலில் நீங்கள் நேரடியாக உங்கள் பார்ட்னரிடமே சொல்லுங்கள். அவரிடம் உங்கள் முடிவை சொல்லுவதற்கு முன் வேறு யாரிடமாவது சொல்லி, அது உங்கள் பார்ட்னரின் காதுகளுக்கு செல்லும் போது நிச்சயம் அது அவரை பாதிக்கும். நீங்கள் பிரேக்கப் குறித்து குழப்பமான நேரத்தில் இருக்கும் போது உங்களுக்கு மற்றவர்களின் ஆதரவு தேவைப்படும். எனினும் உங்கள் மனதில் உள்ள அனைத்தையும் கூறாமல், சில முக்கிய முடிவுகள் அல்லது தகவல்களை முடிந்த வரை உங்கள் மனதோடு வைத்து கொள்ளுங்கள்.
மெச்சூரிட்டி தேவை : பிரேக்கப்பிற்கு பிறகு நீங்கள் மெச்சூரிட்டியாக இருக்க வேண்டும். உறவை முறித்து கொண்ட பிறகு உங்கள் முன்னாள் பார்ட்னரை மீண்டும் தொடர்பு கொள்ளாதீர்கள். இருவரும் பிரிவு காயத்திலிருந்து குணமாக சில காலம் பிடிக்கும். தவிர உங்கள் பிரேக்கப் பற்றிய ஒவ்வொரு சிறிய விவரத்தையும் மற்றவர்களிடம் ஷேர் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லாத ஒன்று.