கணவன், மனைவி தொலைதூரங்களில் இருக்கும்போது, வெவ்வேறு இடங்களில் தனித்து இருக்கும்போது இருவருக்கும் இடையிலான தொடர்பு பாலமாக செல்ஃபோன் விளங்குகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அருகாமையில் ஒரே வீட்டுக்குள் இருக்கும் சமயத்தில் கணவன், மனைவி இடையிலான நேரடி உரையாடல்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் செல்ஃபோன் அமைந்து விடுகிறது.
பொதுவாக தனி நபருக்கான செல்ஃபோன் அழைப்புகள், மெயில், வாட்ஸ் அப் மெசேஜ் போன்றவற்றுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதையும் தாண்டி சிலர் செல்ஃபோன்களில் மூழ்கிவிடுகின்றனர். ஏதோ ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. இதுவே வாடிக்கையாக தொடரும்பட்சத்தில் கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். செல்ஃபோன் பயன்பாடு காரணமாக கீழ்காணும் பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கும்போது, உங்கள் உறவில் விரிசல் ஏற்பட தொடங்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நீடித்த கவனச்சிதறல் : வீட்டில் எல்லோரும் இயல்பாக உரையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில், நீங்கள் செல்ஃபோனில் எந்த தேவையும் இன்றி மூழ்கி இருப்பதும், நோட்டிஃபிகேஷன்களை தேடிக் கொண்டிருப்பதுமாக இருந்தால், நிச்சயம் உங்கள் பார்ட்னருடன் சண்டை வரும். ஆள் மட்டும் இங்கே இருக்கிறார், சிந்தனை வேறு எங்கோ உள்ளது என்ற எண்ணம் மோதலை உருவாக்கும்.
தவறான புரிதல் : உங்கள் பார்ட்னரை கண்டு கொள்ளாமல் செல்ஃபோனும், கையுமாக வலம் வந்து கொண்டிருந்தால், உங்கள் மீது தவறான அபிப்ராயம் உருவாகும். தேவையற்ற வாதங்கள் உண்டாகும். செல்ஃபோனில் உங்கள் நண்பர்கள் அல்லது தோழிகள் கிண்டலாக எதையாவது அனுப்பியிருந்தால், அதை உங்கள் பார்ட்னர் தவறாக புரிந்து கொள்வார்கள்.
உணர்வுப்பூர்வமான பந்தம் அமையாது : பிற நபர்களுடனான உங்கள் தொடர்புகள் அனைத்தும் தொழில்நுட்ப ரீதியாக இருந்தால், சொந்த வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான பந்தத்திற்கு இடமிருக்காது. முடிந்தவரை ஒரு ஃபோன் அழைப்பில் சட்டென்று பேசி முடிக்கும் விஷயத்திற்கு நீண்ட நேரம் டெக்ஸ்டிங் அல்லது இமெயில் செய்வதை தவிர்க்கவும்.