நீங்கள் தப்பாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும், உங்கள் பார்ட்னர் அதைச் சொல்லியே உங்கள் வாயை அடைத்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் நீங்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. ஆகவே, நீங்கள் நியாயமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, இதைச் செய்தால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும், அதாவது சரியான முறையில் உங்கள் பார்ட்னருடன் எப்படி சண்டையிடலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.
பிரச்சினை எதுவோ, அதை மட்டும் பேசவும்
பொதுவாக சண்டை ஆரம்பித்த பிறகு, நாம் என்ன நோக்கத்திற்காக இதை பேசத் தொடங்கினோம் என்பது பலருக்கு மறந்து விடுகிறது. அங்கிருந்து ரூட் மாறிச் சென்று வேறுபல விஷயங்களை பேசி கடைசியில் எந்தத் தீர்வுமே ஏற்படாமல் போகிறது. ஆனால், எதற்காக சண்டையிடுகிறீர்கள் என்ற விஷயம் தான் முக்கியமானது. அதை மட்டும் பேசினீர்கள் என்றால், தேவையற்ற வார்த்தைகள் தவிர்க்கப்படும்.
நீங்கள் வெற்றி பெற வேண்டியதில்லை
உங்கள் பார்ட்னருடன் சண்டையிடும் போது, நீங்கள் பேசி ஜெயித்து விட்டதாக மார் தட்டிக் கொள்வதில் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறதா என்பதே முக்கியமானது. நீங்கள் கொஞ்சம் அதிகமாக வாய்ஸ் கொடுத்து பேசினீர்கள் என்றால், பார்ட்னரின் கருத்து என்ன என்பதே தெரியாமல் போய் விடும். இருவரும் கலந்து பேசிதான் தீர்வு காண வேண்டும்.
பெயர் சொல்லி அழைக்காதீர்கள்
நீங்கள் அன்யோன்யமாக இருக்கும் சமயங்களில் பெயர் சொல்லி அழைப்பது பிணைப்பை அதிகரிக்கும். அதுவே சண்டையிடும் சமயங்களில் பெயர் சொல்லி அழைப்பது உங்கள் பார்ட்னரை அவமதிப்பது போல ஆகும். தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக அவர்கள் கருதுவார்கள். இதனால், உறவுநிலை பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோன்று ஒருமையில் பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.