பார்ட்னரின் செயலால் கடும் கோபத்தில் இருக்கும் நீங்கள், உரக்க கத்தி அந்த கோபத்தை வெளியேற்ற வேண்டும் என நினைக்கிறீர்களா? பார்ட்னர் செய்யும் சில செயல்கள் உங்களுக்கு பிடிக்காமல் போவதும், அதனால் ஏற்படும் கோபமும் விரக்தியும் இயல்பான ஒன்று. நீங்கள் கோபத்துக்கு இடம் கொடுத்தீர்கள் என்றால், உங்களின் இனிமையான உறவு கசந்துபோவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கோபத்தால் உறவு சிதைந்துபோகும். ஆறாத காயம் ஏற்பட்டு விடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதேநேரத்தில், பார்ட்னருடன் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், இங்கே இருக்கும் டிப்ஸ் உங்களுக்கு நிச்சயம் உதவலாம்.
சண்டைக்கு முற்றுப்புள்ளி: உங்களுக்கு இடையில் ஏதோ ஒரு நிகழ்வு குறித்து சண்டை ஏற்படுகிறபோது, அதனை நிதானமாக கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். வார்த்தைகளால் காயப்படுத்தாமல், கோபம் குறையும் வரை சில மணி நேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு பிரச்சனை குறித்து பொறுமையாக இருவரும் விவாதிக்கலாம். உங்கள் பார்ட்னர் குறிப்பிட்ட நிகழ்வு குறித்து பேச விரும்பாதபோது, நீங்களும் தவிர்க்கலாம். உங்கள் எதிர்பார்ப்புக்கான பதில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைத்துவிடும்.
நண்பர்களிடம் பகிர வேண்டாம்: உங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருக்கிறபோது அதனை மூன்றாவது நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நெருங்கிய நண்பர்கள் என்பதால், கோபத்தில் சில தனிப்பட்ட தகவல்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது உங்களுக்கும், பாட்னருக்கும் இடையே இருக்கும் மியூச்சுவல் புரிதலை பாதிக்கும். அவர் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகும். நண்பர்களிடம் நீங்கள் சொல்லும் தகவல்கள் புதுப்பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
கோபத்தை புரிந்து கொள்ளுதல்: உங்கள் பார்ட்னரின் கோபத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏமாற்றப்படுவோமோ என்ற பயம், பொறாமை, எதிர்பார்ப்பு, பதட்டம் ஆகியவை ஏதேனும் ஒன்று அவர்களின் கோபத்துக்கு காரணமாக இருக்கும். அதனை நீங்கள் புரிந்து கொண்டு அந்த நேரத்தில் ரியாக்ட் செய்யாமல் இருந்தாலே பிரச்சனைக்கு தீர்வை கண்டுபிடித்து விடலாம். கோபத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்ல வாய்ப்புகள் உள்ளன. பொறுமையாக பிரச்சனைகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.
எதிர்மறை எண்ணங்கள்: எதிர்மறை எண்ணங்களால் காதலர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல் ஏமாற்றப்படுவோமோ? என்ற பயம், குற்றஞ்சாட்டுவது, மிகைப்படுத்தி நினைத்துக்கொள்ளுதல், சொல்ல வருவதை காது கொடுத்து கேட்காமல் இருப்பது ஆகியவையும் காதலர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கான மூலமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் பிரச்சனையை நிறுத்துவதற்கான முயற்சிகளில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
பழைய நிகழ்வுகள்: கடந்த கால வாழ்க்கைக்கு யாராலும் தீர்வு காண முடியாது. அதில் கிடைத்த பாடத்தைக் கொண்டு அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்ல வேண்டும். அதனால், தற்போது நடக்கும் சண்டையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி பகைமையை அல்லது பிரச்சனையை வளர்க்கக் கூடாது. இது உங்களுக்கு இடையிலான உறவை சுமூகமாக செல்ல வைக்க உதவாது. மன்னித்தல், மறத்தல், கடந்து போதல் ஆகியவை உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்தும். நிதானம்: பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கும்போது, உடனடியாக ரியாக்ட் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டு உங்களை நீங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கும்போது, பார்டயத்னர் அந்தறி பேசு விஷதை பற்வதற்கு தயாராக இருக்கிறாரா? என்று கேளுங்கள். அந்த இடத்தில் அகம்பாவங்களை தூக்கிவைத்துவிட்டு திறந்த மனதுடன் உரையாடுங்கள்.