பொதுவாக விவாகரத்து பெற விரும்பும் தம்பதிகளுக்கு அவர்கள் விவாகரத்துக் கூறிய காலத்திலிருந்து சில காலம் வரை இடைவெளி கொடுப்பார்கள். இது அந்த தம்பதிகள் தாங்கள் எடுத்த முடிவை பற்றி யோசிப்பதற்கும் அதன் விளைவுகளைப் பற்றி ஆராய்வதற்கும் கொடுக்கப்படும் காலமாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருவேளை அவர்கள் விரும்பினால் தங்களுக்குள் உள்ள மனஸ்தாபங்களை பற்றி பேசி, புரிந்து கொண்டு மீண்டும் ஒன்று சேரவும் வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை இது போன்ற நிலைமையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் உங்களுக்கான சில டிப்ஸ்கள் இதோ:
உள்ளுணர்வை நம்புங்கள் :
இது உங்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். எனவே தற்காலிக உணர்வுகளின் அடிப்படையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுகளை எடுப்பது கூடவே கூடாது. இது போன்ற சமயங்களில் நன்றாக யோசித்து இப்போது இருப்பது போன்று பிரிந்தே இருப்பதால் கிடைக்கும் நன்மை தீமைகளையும், ஒருவேளை வரும் காலத்தில் ஒன்று சேர்ந்தால் கிடைக்கும் நன்மை தீமைகளையும் எடை போட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். உங்கள் துணையை பற்றி உங்களுக்கு ஏற்கனவே ஒருவித அபிப்ராயம் ஏற்பட்டிருக்கும். அதையும் கருத்தில் கொண்டு உங்கள் உள்ளுணர்வை கேளுங்கள். இவை அனைத்தையும் தாண்டி உங்களுக்கு மீண்டும் அவருடன் சேர்ந்து வாழலாம் என்று தோன்றினால் தயங்காமல் அந்த முடிவை எடுக்கலாம்.
உங்களுக்கு உண்மையாக இருங்கள் :
நீங்கள் வெளியே எப்படி இருந்தாலும் உங்கள் மனதிற்கு உங்களைப் பற்றி நன்றாக தெரியும். நீங்கள் மறுபடியும் உங்கள் துணையுடன் சேர்ந்து வாழ்வதைப் பற்றி உங்கள் மனதிலும் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் முதலில் அதனை தீர்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறில்லாமல் ஒருவித சந்தேகத்துடனே மறுபடியும் வாழ்க்கையை தொடர்வது என்பது மீண்டும் புதிய சிக்கல்கள் உருவாகத்திற்கு வழிவகுக்கும். ஒருவேளை உங்களால் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியவில்லை எனில் உங்களுடைய நண்பர்களின் அறிவுரையும் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவுரையும் கேட்டு அது சரியான தோன்றும் பட்சத்தில் அதன்படி நடக்கலாம்.
அவசரத்தில் முடிவெடுக்காதீர்கள் :
ஆத்திரமும், அவசரமோ, கோபமோ, மகிழ்ச்சியோ எதையும் அவசரத்தில் முடிவெடுக்காதீர்கள். இது விவாகரத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கையின் பல இடங்களிலும் நீங்கள் நெருக்கடியாக இருக்கும் சமயத்தில் இந்த நடைமுறை கைகொடுக்கும். நீங்கள் பிரிந்தது வேண்டுமானால் அவசரத்தில் எடுத்த முடிவாக இருக்கலாம் ஆனால் நீங்கள் மறுபடி ஒன்று சேர்வது பற்றி மிகவும் நிதானமாக ஆழ்ந்து யோசித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும்.
புதிய அனுபவங்களுக்கு தயாராக இருங்கள் :
வாழ்க்கையில் எப்போதும் எதுவுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. விவாகரத்திற்கு முன்னர் அவர் சற்று கடுமையானவராகவும் மனமுதிர்ச்சி இல்லாமலும் கூட நடந்திருக்கலாம். தற்போது உங்களுக்குள் ஏற்பட்ட இந்த பிரிவு அவருக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி உங்களின் அருமையை அவருக்கு உணர்த்தி அதன் மூலம் அவர் மனமாறுதலை அடைந்திருக்கலாம் எனவே அவரை புதியதொரு கோணத்தில் அணுகுவதற்கு தயாராக இருங்கள்.
கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருக்காதீர்கள் :
வாழ்க்கையில் எப்போதும் ஒரு இடத்தில் தேங்கி இருப்பது நல்லதல்ல. ஒருவேளை நீங்கள் உங்கள் துணையுடன் சேர்ந்து வாழ முடிவு எடுக்கும் பட்சத்தில் இனிமேல் அவரிடம் அவரின் பழைய வாழ்க்கையை பற்றியோ அல்லது உங்களுக்குள் ஏற்கனவே மேற்பட்ட பழைய மனஸ்தாபங்களை பற்றியோ பேசி மறுபடியும் உறவில் விரிசலை ஏற்படுத்த வேண்டாம். சில நேரங்களில் பழைய கசப்பான அனுபவங்களை மறந்து விடுவது நல்லது. இருவரும் புதிய வாழ்க்கைக்கு புத்துணர்ச்சியோடு தயாராகுங்கள்