

daddy's princes என்று சொல்லும் வார்த்தைக்குப் பின் எத்தனை அர்த்தங்கள் உள்ளன எனத் தெரியுமா..? பெண்களின் வாழ்க்கையில் தந்தையின் பங்களிப்பு மிகப்பெரியது. அதனால்தான் அப்பா என்றாலே மகள்களுக்கு தனிபாசம். அப்படி என்ன செஞ்சிட்டாரு என்று கேட்கிறீர்களா..? வாங்க சொல்றேன்.


நம்பிக்கை , மன வலிமைக்குக் காரணமானவர் : பெண்கள் ஏதாவதொரு விஷயத்தில் மன முடைந்து போனால் ஆறுதல் சொல்லும் முதல் நபராகத் தந்தைதான் இருப்பார். அந்த இடத்தில் தைரியத்தையும், மன வலிமையையும் சொல்லிக் கொடுப்பார். பிடிக்காத ஒன்றை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளாதே எனச் சொல்லிக்கொடுப்பார்.


பெண்களின் முதல் அன்பு : ஒவ்வொரு பெண்ணிற்கும் தங்களின் முதல் அன்பு என்றால் அது அப்பாதான். தனக்கு பாதுகாவலனாகவும், தன் தேவைகளைப் பூர்த்தி செய்தவராகவும், தன் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும், தன் கனவுகளுக்குத் துணை நின்றவர் என எல்லாவற்றிற்குமான முதல் ஆண் தந்தைதான்.


சிறந்த துணையைக் கொடுத்தவர் : தன்னுடைய ஒட்டு மொத்த அன்பும் மகள் என்றபோது அவருடைய இடத்தை நிரப்ப, தன்னை போல் மகளைப் பார்த்துக்கொள்ள ஒரு ஆண் துணையை மகளுக்காகப் பார்த்துப் பார்த்து கல்யாணம் முடிப்பார்கள். மகளுக்கு யார் மீதேனும் காதல் இருந்தால் முதலில் ஒப்புக்கொள்ளும் நபர் அம்மாவைக் காட்டிலும் அப்பாவாகத்தான் இருப்பார்.


வெற்றியை வாங்கித் தந்தவர் : ஒவ்வொரு தந்தையும் தன் மகள் கனவு வெற்றி அடைய வேண்டும் என மகளை விட அப்பாதான் ஏங்குவார். அதற்காக இந்த சமூகமே எதிர்த்தாலும் துணை நிற்பார்.


அம்மாவின் கோபங்களிலிருந்து காப்பாற்றியவர் : அம்மா என்றாலே சில விஷயங்களுக்குக் கண்டிப்பு இருக்கும். அப்போது சில திட்டுகள் இருக்கும், அடி கிடைக்கும், வேண்டாம் எனத் தடுப்பார்கள். ஆனால் இவை எல்லாவற்றிலிருந்து மகளைக் காப்பாற்றி விருப்பம் போல் செயல்பட உதவுவார்கள்.


பொறுப்புகளைக் கற்றுத் தந்தவர் : பெண்கள் அப்பாவின் ஒவ்வொரு பிரச்னைகளையும் பார்த்துள்ளார். குடும்ப வறுமையைச் சமாளிப்பது, அலுவலக வேலை, அம்மாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அதே சமயம் குழந்தைகளையும் கவனிப்பது என எல்லாவற்றையும் தோளில் சுமந்து சிரித்துக்கொண்டே எதிர்கொள்ளும் வலிமையைக் கண்டு ஒவ்வொரு பெண்ணும் வியந்ததுண்டு. அவரைப் பார்த்துதான் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய ரோல் மாடலாக அப்பாவை நினைக்கின்றனர். அவர் வழி பொறுப்புகளைப் புரிந்துகொள்கின்றனர்.


பகிர்ந்து கொண்ட சில ஜோக்ஸ் : அப்பா மகள்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் மிக அழகானது. அவ்வப்போது இருவரும் சேர்ந்து செய்யும் கிண்டல் , ஜோக்குகள் அம்மாவையே கோபப்பட வைக்கும். அதுவும் அவர்கள் செய்துகொள்ளும் ஜோக்குகள் அவர்களுக்கு மட்டுமே புரியும்.


தவறுகளையும் ஏற்றுக் கொண்டவர் : மகள் செய்யும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் முதல் நபர் அப்பாதான். தவறுகள் வழியே மகளைத் திருத்தவும் முற்படுவார். அவருக்கு ஊக்கமளித்து உந்துதல் சக்தியாக இருப்பார். விளையாட்டு, ஹாபி என எதுவாக இருந்தாலும் தன் மகளின் விருப்பத்திற்குத் துணை நிற்பார்.