பொதுவாக தம்பதிகள் காதல் உணர்வுடன் படுக்கையில் ஒன்று சேர முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருப்பினும் உடலுறவு கொள்வது மட்டுமே தம்பதியர் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் இதைவிட முக்கியமானது உடலுறவு கொண்ட பிறகு படுக்கையில் ஒருவரையொருவர் அரவணைப்பது. ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளின்படி உடலுறவுக்குப் பிறகு படுக்கையில் துணையை அரவணைப்பது மகிழ்ச்சியை மட்டுமின்றி பல உடல் ஆரோக்கிய நலன்களையும் கொண்டிருப்பதாக காட்டுகின்றன. உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி உடலுறவுக்கு பிறகான அரவணைப்பு தம்பதியரிடையே பிணைப்பு, அன்பை மேம்படுத்தி வலுவான உறவுவுக்கு அடித்தளமாக அமையும்.
லவ் ஹார்மோன் : கட்டிப்பிடித்தலை போலவே படுக்கையில் உடலுறவுக்கு பிறகான அரவணைப்பு உடலில் ஆக்ஸிடாஸின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிட்யூட்டரி சுரப்பியால் வெளியிடப்படும் இதற்கு லவ் ஹார்மோன் என்று பெயர். பொதுவாக இது உடலுறவு, பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காதல் ஹார்மோன் மனநிலையை மகிழ்ச்சியாக வைக்கிறது. செக்ஸிற்கு பிறகு oxytocin ஹார்மோன் வெளியாக காரணமாக இருக்கும் அரவணைப்பினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இதய நோய் அபாயங்கள் குறைவு : செக்ஸிற்கு பிறகான அரவணைப்பு ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இதய நோய்கள் சார்ந்த அபாயங்களை குறைக்கிறது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவில் பார்ட்னருடனான உடலுறவிற்கு பிறகு அவரை சில நிமிடங்கள் தொடர்ந்து அரவணைப்பது ரத்த அழுத்த அளவை வெகுவாக கட்டுப்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் மற்றொரு ஆய்வில் ப்ரீ-மெனோபாஸ் நிலையில் இருக்கும் 59 பெண்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களது ரத்த அழுத்தம் தங்கள் பார்ட்னரை கட்டிப்பிடித்து அரவணைக்கும் முன்பும், பின்பும் பரிசோதிக்கப்பட்டது. அரவணைப்பிற்கு பிறகு அவர்களது ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததும், அவர்களின் உடலில் ஆக்ஸிடாஸின் அளவு அதிகரித்ததும் கண்டறியப்பட்டது.
மனஅழுத்தம் குறையும் : இன்று பெரும்பாலானோர் மனத்தில் ஸ்ட்ரெஸ்ஸுடன் தான் சுற்றி திரிகிறார்கள். உடலுறவுக்கு பின் தம்பதியர் ஒருவரை ஒருவர் படுக்கையில் நன்கு அரவணைத்து கொள்வது மனதளவில் இருக்கும் அனைத்து அழுத்தங்களையும் கணிசமாக குறைக்க உதவுகிறது. கட்டிப்பிடித்தல் மற்றும் அரவணைப்பால் உடலால் வெளியாகும் ஆக்ஸிடாசின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை குறைப்பதில் வேலை செய்கிறது. இதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது. தவிர ஆக்ஸிடாசின் உடல் வலியை குறைக்க மற்றும் நிம்மதியான தூக்கத்திற்கும் உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : படுக்கையில் தம்பதியரிடையேயான அரவணைப்பு செரோடோனின் மற்றும் டோபமைன் உள்ளிட்டவற்றை உடல் தூண்ட ஊக்குவிக்கிறது. இவை காதல் ஹார்மோனுடனான oxytocin உடன் சேர்ந்து ஆரோக்கியத்தை கெடுக்கும் தொற்றுகளுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. உடலின் செல்கள் திறம்பட செயல்பட உதவும் ஆக்ஸிடாசின், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுவாக்குகிறது.
பிணைப்பை வலுவாக்கும் : oxytocin பிணைப்பு ஹார்மோன் (bonding hormone) என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒருவர் தனது அன்புக்குரியவரை கட்டிப்பிடிக்கும் போது முத்தமிடும் போது மற்றும் அரவணைக்கும் போது வெளியாகும் ஆக்ஸிடாசின், அவரை தனது துணையுடன் மேலும் நெருக்கமானவராக மாற்றுகிறது. குறிப்பாக உடலுறவுக்கு பின் நிகழும் அரவணைப்பு என்பது உடல் தேவை முடிந்த பின்னரும் கூட, மனதளவில் ஒருவர் மற்றொருவரை எவ்வளவு காதலிக்கிறார், நெருக்கமானவராக நினைக்கிறார் என்பதை உணர்த்தி இருவரிடையே பிணைப்பை வலுவாக்குகிறது.