கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டம். தாய்மையை நோக்கிய பயணம், ஒரு பெண் எப்போதும் இருந்ததை விட மிகவும் வலுவான, உறுதியான, அக்கறையுள்ள ஒரு முற்றிலும் மாறுபட்ட நபராக ஆக்குகிறது. கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு பிறக்க போகும் குழந்தை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அந்த கர்ப்பிணிக்கு அவர் கணவர் தரும் ஆதரவும், அக்கறையும் மிகவும் முக்கியம். தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் சேய் இருவரின் மனம் மற்றும் உடல் நலன் தாயின் மகிழ்ச்சியை பொறுத்தே இருக்கிறது. ஒரு கணவனாக இருந்தது கொண்டு கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவிக்காக நீங்கள் சாப்பிட முடியாது, அவர் அனுபவிக்கும் அசவுகரியங்களை நீங்கள் உணர முடியாது.
இருந்தாலும் கர்ப்பிணியான உங்கள் மனைவிக்கு ஆதரவாகவும், அன்பாகவும் இருக்க உங்களால் பல விஷயங்களை செய்ய முடியும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உங்கள் மனைவியின் மனநிலை மற்றும் உணர்ச்சி கணிக்க முடியாததாக இருக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் மனைவிக்கு நீங்கள் பக்கபலமாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. வழக்கமான நேரத்தில் இருப்பதை விட அதிக அன்பும், அக்கறையும் உங்கள் கர்ப்பிணி மனைவிக்கு தேவைப்படும்.கர்ப்ப காலத்தில் உங்கள் மனைவியை நீங்கள் அதிக காதலுடன் கவனித்து கொள்வதையும், கர்ப்பிணி மனைவியை நீங்கள் நேசிப்பதாக உணர வைப்பதற்கான சில வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
படைப்பு : நீங்கள் எழுதுவதிலோ அல்லது ஓவியங்கள் வரைவதிலோ விருப்பம் உள்ளவர் என்றால் ஒரு அழகான லவ் கார்டில் உங்கள் மனைவி மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை கவிதையாக எழுதி அவருக்கு பரிசளிக்கலாம். உங்களால் நன்றாக வரைய முடிந்தால் உங்கள் மனைவிக்காக ஒரு அழகான ஓவியத்தை அவருக்கே தெரியாமல் வரைந்து சர்ப்ரைஸ் கொடுக்கலாம். உங்கள் மனைவிக்காக நீங்கள் உருவாக்கும் படைப்பு நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் ஆதரவை உணர்த்தும்.
பிடித்த உணவு : கர்ப்ப காலத்தில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் உங்கள் மனைவியிடம் காணப்படும் என்பதால் ஒருநாள் மிகவும் விருப்பமாக சாப்பிட்ட உணவு மறுநாள் பிடிக்காமல் போகலாம். எனவே அவருடைய உணவு வெறுப்புகளையும் ஏக்கங்களையும் ஏற்று கொள்ளுங்கள். குறிப்பிட்ட தினத்தில் அவருக்கு என்ன சாப்பிட விருப்பமாக இருக்கிறது என்பதை அறிந்தது அந்த உணவை உங்கள் கைகளால் நீங்களே தயாரித்து அவருக்கு பரிமாறலாம். நீங்கள் தயாரித்த உணவை சாப்பிடும் போது அவருக்கு பிடித்த இசை அல்லது பாடல்களை பின்னணியில் ஒலிக்க செய்து அவர் மீது உங்களுக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்துங்கள்.
கால் மசாஜ் : அன்றாடம் வேலைக்கு போய்விட்டு வருவதால் ஏற்படும் உடல் அலுப்பு, உடல் மற்றும் கால் வலி பற்றி கணவரான நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இன்னொரு உயிரை வயிற்றில் சுமக்கும் உங்கள் மனைவிக்கு சோர்வும், உடல் வலியும் சற்று அதிகமாகவே இருக்கும். எனவே உங்கள் கர்ப்பிணி மனைவிக்கு நல்ல வாசனை மற்றும் வலி போக்க கூடிய ஆயிலை கொண்டு கால்கள் மற்றும் பாதங்களை மென்மையாக தேய்த்து நன்கு மசாஜ் செய்து விடுங்கள். இது அவருக்கு ஏற்பட்டுள்ள மனஅழுத்தத்தை குறைக்க உதவும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு மிகவும் தேவைபடும் ஒன்று கால் மசாஜ் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
காலை ஓய்வு: கர்ப்பத்தின் போது உடல் மிக சோர்வாக இருக்கும் என்பதால் காலை எழுந்து கவனிக்க வேண்டிய வேலைகளை நீங்களே செய்து முடிக்கலாம். ஏனென்றால் உங்கள் கர்ப்ப மனைவிக்கு வழக்கத்தை விட அதிக ஓய்வு தேவைப்படலாம். காலையில் சீக்கிரம் எழாமல், சற்று நிதானமாக தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது அவரை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
பிடித்த இடம்: உங்கள் இருவரையும் உற்சாகமாகவும், மன நிம்மதியுடனும் வைத்திருக்க கூடிய இடத்திற்கு வார இறுதியில் உங்கள் கர்ப்பிணி மனைவியை பாதுகாப்பாக அழைத்து செல்லுங்கள். நீங்கள் போகும் இடம் மிகவும் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் மன அழுத்தமில்லாத சூழலில் ஒருவருக்கொருவர் உங்கள் நேரத்தை சிறப்பாக செலவிட கூடியதாக இருக்க வேண்டும்.