மனிதர்களின் இனப்பெருக்கத்திற்கு மட்டுமல்லாமல் உடலும், உள்ளமும் பேரின்பம் அடைவதற்கான வழிமுறையாகவும் தாம்பத்ய வாழ்க்கை இருக்கிறது. ஓரிரு குழந்தைகளை பெற்ற பிறகு இல்லற வாழ்வு தேவையில்லை என்று யாரும் ஒதுக்கிவிடுவதில்லை. உடலில் வலுவும், உள்ளத்தில் கிளர்ச்சியும் இருக்கும் வரையில் ஆணும், பெண்ணும் பாலியல் உறவு கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், ஏதேதோ காரணங்களால் தம்பதியர்களில் யாரோ ஒருவருக்கு பாலியல் உறவு மீதான ஆர்வம் குறையத் தொடங்கி விடுகிறது. இன்றைய துரிதமான வாழ்க்கை சூழலால் ஏற்படுகின்ற ஸ்ட்ரெஸ், குழந்தை பராமரிப்பு, நேரமின்மை, தீர்வில்லாத பிரச்சினைகள் போன்ற பல காரணங்களால் தம்பதியர்களுக்கு பாலியல் உறவில் நாட்டம் குறையத் தொடங்குகிறது.
இருப்பினும் நீண்ட காலத்திற்கு பாலியல் உறவு இல்லாமல் போனால் தம்பதியர்கள் இடையே அன்பும், பிணைப்பும் குறையத் தொடங்கிவிடும். அதன் காரணமாக சண்டைகள் சாதாரணமாகிப் போகும். நாளடைவில் விவகாரத்து ஏற்படுவதற்கும் கூட வாய்ப்பாக அமைந்துவிடும். அதிலும் பெண்களுக்குத்தான் பாலியல் ஆசை முதலில் குறைகிறதாம். இதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் பயன்பாடு: ஒரு குழந்தை பெற்ற பின்பு மீண்டும் உடனடியாக கருத்தரிப்பதை தவிர்க்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துவதால் சிலருக்கு பாலியல் உறவு மீதான ஆர்வம் குறையலாம். சிலருக்கு பாலியல் உறவில் நீடித்து நிற்கும் நேரம் குறையத் தொடங்கும்.
தீர்க்கமுடியாத பிரச்சினைகள்: அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப பல தம்பதியர்கள் சண்டைக்குப் பின் பாலுறவு கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது மனக்குறைகளை போக்கி சமாதானம் அடைய உதவுகிறது. ஆனால், தம்பதியர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லாமல் போனால் பாலுறவு மீதான நாட்டம் குறைந்துவிடும்.
இதர காரணங்கள்: பெண்கள் கர்ப்பம் அடைந்திருப்பின் அவர்களுக்கு பாலுறவு மீதான நாட்டம் குறையத் தொடங்கும். போதுமான தூக்கமும், ஓய்வும் இல்லை என்றாலும் கூட பாலுறவின் மீது ஆர்வம் இருக்காது. பாலியல் உறவில் புத்தம்புது யோசனைகள் மற்றும் விளையாட்டுகளை பயன்படுத்த தவறும் பட்சத்திலும் கூட ஆர்வம் குறைய வாய்ப்பிருக்கிறது. அதே போல, உறவில் சுவாரஸ்யங்கள் அல்லது மகிழ்ச்சியான தருணங்கள் இல்லை, தம்பதிகளுக்கிடையேயான வாழ்க்கை ஒரே மாதிரி இயந்திரம் போல இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.